அசாம் முன்னாள் முதல்வரான சர்வானந்த சோனோவால் கடந்த ஜூலை மாதம் மத்திய அமைச்சரவையில் சேர்க்கப்பட்டார். கப்பல் போக்குவரத்து, துறைமுகங்கள், நீர்வழிப் போக்குவரத்து மற்றும் ஆயுஷ் துறைகளின் அமைச்சராக அவர் பதவியேற்றார். மத்திய அமைச்சராக பதவியேற்ற 6 மாதங்களுக்குள் அவர் நாடாளுமன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட வேண்டும்.
இந்நிலையில் அசாமில் காலியாக இருக்கும் மாநிலங்களவை இடத்துக்கான தேர்தல் அக்டோபர் 4-ம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டது. இத்தேர்தலில் போட்டியிட குவாஹாட்டியில் சட்டப்பேரவை அலுவலகத்தில் உள்ள தேர்தல் அதிகாரியிடம் சர்வானந்த சோனோவால் நேற்று வேட்பு மனு தாக்கல் செய்தார். அப்போது, அசாம் முதல்வர் ஹிமந்த விஸ்வ சர்மா, பாஜக மற்றும் கூட்டணிக் கட்சிகளின் தலைவர்கள், எம்.பி.க்கள் மற்றும் எல்எல்ஏக்கள் உடனிருந்தனர். வேட்பு மனு தாக்கலுக்கு இன்று கடைசி நாளாகும். காங்கிரஸ் மற்றும் பிற எதிர்க்கட்சிகள் வேட்பாளர் எவரையும் அறிவிக்கவில்லை. இதனால் சர்வானந்த சோனோவால் போட்டியின்றி தேர்வு செய்யப்படுவது உறுதியாகியுள்ளது.
சோனோவால் தற்போது அசாமின் மஜுலி தொகுதி எம்எல்ஏவாக உள்ளார். அக்டோபர் 4-ம் தேதிக்கு பிறகு அவர் தனது எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்வார் என எதிர்பார்க்கப்படுகிறது.