இந்தியா

குதிரை பண்ணை உரிமையாளர் ஹசன் அலி கான் வீடு, அலுவலகம் உட்பட 9 இடங்களில் அமலாக்கத் துறை சோதனை

பிடிஐ

புனேவைச் சேர்ந்த குதிரைப் பண்ணை உரிமையாளர் ஹசன் அலி கான் மீதான சட்டவிரோத பணபரிவர்த்தனை மற்றும் கறுப்பு பண வழக்கு தொடர்பாக ஆறு நகரங்களில் உள்ள அவரது வீடு மற்றும் அலுவலகம் என ஒன்பது இடங்களில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

மகாராஷ்டிர மாநிலம் புனேவைச் சேர்ந்த குதிரைப் பண்ணை உரிமையாளர் ஹசன் அலி. இவர் வெளிநாட்டு வங்கி களில் ஏராளமான கறுப்பு பணத்தை பதுக்கி வைத்திருப்பதாக குற்றச் சாட்டு எழுந்தது. மேலும் வருமான வரித் துறைக்கு ரூ.50 ஆயிரம் கோடி வரை வரி ஏய்ப்பு செய்திருப்பதும் கண்டறியப்பட்டது.

இது தொடர்பாக கடந்த 2007-ம் ஆண்டு அமலாக்கத் துறை, மும்பை பொருளாதார குற்றப் பிரிவு உட்பட பல்வேறு புலனாய்வு முகமைகள் ஹசன் அலி கான் மீது சட்டவிரோத பணபரிவர்த்தனை, வரி ஏய்ப்பு மற்றும் பாஸ்போர்ட் விதிமீறல் ஆகிய குற்ற வழக்கு களை பதிவு செய்தன. தனிப்பட்ட நபர் ஒருவர் ரூ. 50 ஆயிரம் கோடிக்கு அதிகமாக வரி ஏய்ப்பில் ஈடுபட்டிருப்பது இதுவே முதல் முறை என்பதால் இவ்வழக்கு நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியிருந்தது.

இதையடுத்து ஹசன் அலி கான் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பின்னர் நீண்ட ஆண்டுகளுக்கு பின், கடந்த ஆண்டு ஆகஸ்டில் அவர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டார். அப்போது முதல் மும்பை மற்றும் புனேவில் உள்ள வீடுகளில் அவர் வாழ்ந்து வருவதாக கூறப்படுகிறது.

இந்நிலையில் மும்பை நீதிமன்றத்தில் நடந்து வரும் இவ்வழக்கு தொடர்பாக புதிதாக துப்பு துலங்கியிருப்பதால், அதற்கான ஆதாரங்களை சேகரிப்பதற்காக மும்பை, புனே, குர்கான், கொல்கத்தா உட்பட ஆறு நகரங்களில் ஹசன் அலி கானுக்கு சொந்தமாக உள்ள வீடுகள் மற்றும் அலுவலகங்கள் என ஒன்பது இடங்களில் நேற்று ஒரே நேரத்தில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை நடத்தினர்.

கடந்த 2009 வருமானவரி தாக்கல் ஆண்டில் ஹசன் அலி கான், அவரது கூட்டாளியான காசிநாத் தபுரியா மற்றும் எட்டு பேர் அடங்கிய முதல் 10 வரி ஏய்ப்பாளர்கள் பட்டியல் வெளி யிடப்பட்டது. அதில் கூட்டாளி தபுரியா (ரூ.602.80 கோடி), மறைந்த ஹர்ஷத் மேத்தா (ரூ.12,719.14 கோடி), நரோட்டம் (ரூ.5,781.86 கோடி), ஹித்தன் தலால் (ரூ.4,200 கோடி), ஜோதி மேத்தா (ரூ.1,739.57 கோடி), அஸ்வின் மேத்தா (ரூ.1,595.51 கோடி), பி.சி.தலால் (1,535.89 கோடி), எஸ்.ராமசாமி (ரூ.1,122.48 கோடி) மற்றும் உதய் எம்.ஆச்சார்யா (ரூ.683.22 கோடி) ஆகியோர் வரி ஏய்ப்பு செய்திருப்பதாக குறிப்பிடப்பட்டிருந்தது.

SCROLL FOR NEXT