நாட்டின் வளர்ச்சிக்கு உதவாத விவாதங்கள், போராட்டங்கள் தேசத்துக்கு அவமதிப்பை ஏற்படுத்துவதாகும் என்று நடிகர் மோகன்லால் தெரிவித்துள்ளார்.
ஜே.என்.யூ விவகாரத்தை முன்னிட்டு அவர் இவ்வாறு கூறியுள்ளார். இது குறித்து அவர் “இந்தியா செத்துக் கொண்டிருக்கும் போது வாழ்ந்துதான் என்ன பயன்?” என்ற தலைப்பில் வெளியிட்டுள்ள தனது வலைத்தளப் பதிவில் கூறியிருப்பதாவது:
அனைத்து விவாதங்கள், போராட்டங்கள், வேலை நிறுத்தங்கள் போன்றவை நாட்டின் வளர்ச்சிக்கு உதவினால்தான் நல்லதாகும்.
சுதந்திரத்தை பாதுகாக்காத எந்த ஒரு விவாதமும், அதாவது பலபேர் தியாகம் செய்து நாம் வாங்கிய, இப்போது வரை பராமரித்து வரப்படும், சுதந்திரத்தை வலுப்படுத்த உதவாத எந்த ஒரு விவாதமும் அர்த்தமற்றது என்பதோடு, தேசத்துக்கு பெரிய அவமதிப்பாகும்.
எது நாட்டுப்பற்று என்பதை விளக்க நாம் ஒருவருக்கு ஒருவர் சண்டையிட்டுக் கொள்கிறோம். இதைவிட இந்த உலகில் வெட்கக் கேடானது ஏதாவது இருக்க முடியுமா? நாட்டுக்காக தங்களது வாழ்க்கையைத் தியாகம் செய்தோருக்கு இதைவிட வேறு இழுக்கு என்ன வேண்டும்?
இந்த நாடு ஏற்படுத்திக் கொடுத்துள்ள அனைத்து வசதிகளையும் பயன்படுத்திக் கொண்டு நாம் அலுவலகத்திற்கு வருகிறோம், பொது இடங்களில் விவாதம் நடத்த வருகிறோம்... எதற்காக? வேலைநிறுத்தங்களை ஒருங்கிணைப்பதற்கும், கற்கள் வீசி தாக்குதல் நடத்துவதற்கும், ராணுவ வீரர்களை வசைபாடுவதற்கும், தேசவிரோதிகளை கருத்துரிமை, பேச்சுரிமையின் பிரதிநிதிகளாகச் சித்தரிப்பதற்குமா?
பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளிடம் பேசும்போதோ, அல்லது மகளுக்கு தந்தை கடிதம் எழுதும் போதோ, தங்கள் மகனோ, மகளோ தேசத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்புவது கூடாது என்று அறிவுரை வழங்க வேண்டும்.
இவ்வாறு தனது வலைப்பதிவில் மோகன்லால் ஆவேசமாக எழுதியுள்ளார்.