யோகி ஆதித்யநாத் 
இந்தியா

அம்பேத்கர் சாதி அரசியலை போதிக்கவில்லை: உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் உரை

செய்திப்பிரிவு

அம்பேத்கர் சாதி அரசியலை போதிக்கவில்லை என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கூறினார்.

பாஜக எஸ்.சி அணியின் தேசியசெயற்குழுக் கூட்டம் உத்தரபிரதேச மாநிலம் வாரணாசியில் நடைபெற்றது. இதன் இறுதி அமர்வில் உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் பங்கேற்று நேற்று முன்தினம் பேசியதாவது:

தூய்மை இந்தியா இயக்கத்தின் மூலம் நாடு முழுவதும் 10 கோடி பேரின் வீடுகளில் கழிப்பறைகள் கட்டப்பட்டுள்ளன. இதில் பலன் அடைந்தவர்களில் 95 சதவீதம் பேர், எஸ்சி, எஸ்டி மற்றும் ஓபிசி வகுப்பினர் ஆவர். உ.பி.யில் 2.61 கோடி பேருக்கு கழிப்பறை கட்ட நிதியுதவி அளிக்கப்பட்டது.

மக்களின் வாழ்வில் முன்னெப்போதும் இல்லாத முன்னேற்றத்தை தூய்மை இந்தியா இயக்கம் கொண்டுவந்தது. உலகில் இந்தியா பற்றிய தோற்றத்தை மாற்றியுள்ளது.

எஸ்சி, எஸ்டி, ஓபிசி சமூகத்தினருக்கு முந்தைய அரசுகள் உதட்டளவில் மட்டுமே சேவையாற்றின. ஆனால் பாஜக உண்மையாக சேவையாற்றி வருகிறது. பாஜக அரசுடன் ஒப்பிடும்போது, அவர்கள் தங்கள் சமூக ஆளு மைகளின் நினைவிடங்களை அழகுபடுத்துவதில் மட்டுமே மும்முரமாக இருந்தனர்.

அம்பேத்கர் சாதி அரசியலை அல்ல, ராஷ்ட்ர தர்மத்தை (தேசத்துக்கான கடமையை) போதித்தார். சமூக நீதி, சமத்துவம், இந்தியவிழுமியங்கள் மற்றும் பாரம்பரியத்துக்கு ஆற்றிய சேவைக்காக அம்பேத்கர் மதிக்கப்பட்டார். அம்பேத்கர் காலத்தில் வாழ்ந்த ஜோகேந்திர நாத் மண்டல், பாகிஸ்தான் உருவாக்கத்தை ஆதரித்தார். ராஷ்ட்ர தர்மத்துக்கு எதிராக செயல்பட்டார். இதன் பிறகு அவர் மக்களால் மறக்கப்பட்டார். அவருக்கு ஏற்பட்ட நிலைதான் இன்று ராஷ்ட்ர தர்மத்தை எதிர்ப்பவர்களுக்கு ஏற்படும்.

எங்களுக்கு சாதிய கண்ணோட்டம் இல்லை. தேசத்துக்கான கடமைதான் எங்களது ஒரே மதம் ஆகும். பாஜக சாதி அரசியலில் ஈடுபடவில்லை. சமூகத்தில் நல்லிணக்கத்தை ஏற்படுத்த பாடுபடுகிறது. அடித்தட்டு மக்களின் வாழ்க்கைத் தரத்தில் அடிப்படை மாற்றத்தை கொண்டுவர வேண்டும் என்ற அம்பேத்கரின் கனவுகளை நனவாக்க பாஜக அரசுகள் பல்வேறு நலத்திட்டங்களை செயல்படுத்தி வருகின்றன.

இவ்வாறு யோகி ஆதித்யநாத் பேசினார். -பிடிஐ

SCROLL FOR NEXT