கர்நாடக முதல்வர் பசவராஜ் பொம்மைக்கு பகிரங்கமாக கொலை மிரட்டல் விடுத்த இந்து மகாசபாவின் மங்களூரு மாவட்ட தலைவர் தர்மேந்திரா கைது செய்யப்பட்டுள்ளார்.
கர்நாடக மாநிலம் மைசூரு வில் சாலை விரிவாக்கப் பணிகளின் போது இந்து கோயில் இடிக்கப்பட்டது. இதன் வீடியோ சமூக வலைதளங்களில் வெளியான நிலையில் காங்கிரஸ், மஜத உள்ளிட்ட எதிர்க்கட்சிகள் கடும் கண்டனம் தெரிவித்தன. பாஜகவை சேர்ந்த முன்னாள் முதல்வர் எடியூரப்பா, முன்னாள் அமைச்சர் சீனிவாச பிரசாத் ஆகியோரும் கர்நாடக அரசு அதனை தடுத்திருக்க வேண்டும் என மாநில அரசுக்கு கடும் கண்டனமும் அதிருப்தியும் தெரிவித்தனர்.
இந்நிலையில் மங்களூரு மாவட்ட இந்து மகா சபா தலைவர் தர்மேந்திரா நேற்று முன் தினம் வீடியோ ஒன்றை வெளியிட்டார். அதில், ‘‘இந்துக்களுக்கு ஆதரவான கட்சி என சொல்லிக் கொள்ளும் பாஜக, சாலை விரிவாக்கப் பணிகள் என்ற பெயரில் கோயில்களை இடித்ததன் மூலம் தனது சுயரூபத்தை காட்டியுள்ளது. இந்துக்களின் முதுகில் பாஜக அரசு குத்திவிட்டது.
காந்தி இந்துக்களுக்கு ஆதரவானவரைப் போல நடித்து, இந்துக்களுக்கு எதிராக செயல் பட்டார். அதனால் அவருக்கு இந்துக்கள் தக்கப் பாடம் புகட்டினார்கள். அவருக்கே இந்த நிலை என்றால் பசவராஜ் பொம்மைக்கு எந்த நிலை என யோசித்துக் கொள்ளுங்கள். பசவராஜ் பொம்மைக்கு எப்படி பாடம் புகட்ட வேண்டும் என எங்களுக்கு தெரியும்'' என பகிரங்கமாக மிரட்டல் விடுத்தார். அப்போது தர்மேந்திராவுடன் இந்து மகா சபாவின் நிர்வாகிகள் கமலாக்ஷ பாட்டீல், உல்லால், பிரேம் போலாலி உள்ளிட்ட 6 பேர் அமர்ந்திருந்தனர்.
இந்த வீடியோ சமூக வலை தளங்களில் வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தியது. இதை தொடர்ந்து மங்களூரு மாநகர போலீஸார் தாமாக முன்வந்து வழக்குப் பதிவு செய்தனர்.
இதுதொடர்பாக இந்து மகா சபா நிர்வாகிகள் 6 பேர் மீது கொலை மிரட்டல், சமூக அமைதிக்கு பங்கம் விளைவித்தல் உள்ளிட்ட 8 பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்தனர். இந்நிலையில், நேற்று இந்து மகா சபா மங்களூரு மாவட்ட தலைவர் தர்மேந்திரா உள்ளிட்ட 4 பேரை கைது செய்தனர். தலைமறைவாக உள்ள 2 பேரை தேடி வருகின்றனர்.