சதானந்த கவுடா | கோப்புப் படம். 
இந்தியா

எனது வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் போலி ஆபாச வீடியோ வெளியீடு: சதானந்த கவுடா வேதனை

செய்திப்பிரிவு

''அரசியலில் எனது வளர்ச்சியைப் பொறுக்க முடியாமல் சிலர் போலியாகத் தயாரிக்கப்பட்ட ஆபாச வீடியோவைப் பரப்பி என் மீது களங்கம் விளைவிக்க முயல்கிறார்கள்'' என்று கர்நாடக மாநில முன்னாள் முதல்வரும், முன்னாள் மத்திய அமைச்சருமான சதானந்த கவுடா தெரிவித்துள்ளார்.

இது தொடர்பாக அவர் தனது ட்விட்டர் பக்கத்தில், "அரசியலில் எனது எழுச்சியைப் பொறுக்க முடியாமல் சிலர் போலியான ஆபாச வீடியோவை வெளியிட்டுள்ளனர். சமூக வலைதளங்களில் வைரலாகும் அந்த வீடியோ எனக்கு மிகுந்த வேதனையைத் தருகிறது. இது தொடர்பாக போலீஸில் புகார் கொடுக்கப்பட்டுள்ளது. சம்பந்தப்பட்டவர்களை உடனடியாகக் கைது செய்து நடவடிக்கை எடுக்க காவல்துறையிடம் வேண்டுகோள் விடுக்கப்பட்டுள்ளது" என்று பதிவிட்டுள்ளார்.

நேற்று சதானந்த கவுடா, ஒரு பெண்ணுடன் இணையத்தின் வாயிலாக ஆபாசப் பேச்சுகளில் ஈடுபடுவது போன்ற வீடியோ ஒன்று சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவியது. அது பெரும் பரபரப்பை ஏற்படுத்திய நிலையில், அது போலி வீடியோ என்று சதானந்த கவுடா ட்வீட் செய்துள்ளார்.

இதற்கிடையில், இது தொடர்பாக பெங்களூரு காவல் ஆணையர், பெங்களூரு காவல் துணை ஆணையர், ஆர்.டி.நகர் துணை ஆணையர் ஆகியோரிடம் புகார் அளிக்கப்பட்டுள்ளது.

அந்தப் புகாரில் கூறப்பட்டிருப்பதாவது:

''சதானந்த கவுடாவுக்கு எதிரான இந்த வீடியோ அரசியல் காழ்ப்புணர்ச்சியால் தூண்டப்பட்டது. போலியாகத் தயாரிக்கப்பட்டது. இந்த வீடியோக்கள் ஃபேஸ்புக், வாட்ஸ் அப் போன்ற சமூக வலைதளங்களில் வேகமாகப் பரவி வருகின்றன. இந்த வீடியோ என்னைப் போன்ற உருவ ஒற்றுமை கொண்டவரை வைத்து உருவாக்கப்பட்டுள்ளது. ஆகையால் இவ்விவகாரத்தில் உரிய நடவடிக்கை எடுத்து வீடியோ பரவுவதைத் தடுப்பதோடு, தவறு செய்தவர்கள் மீது சட்டத்துக்கு உட்பட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும்''.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT