இந்தியா

போதிய தகுதி இல்லாத மாணவர்கள் கல்லூரிகளில் குறுக்கு வழியில் சேர்வதை தடுக்க வேண்டும்: டெல்லி உயர் நீதிமன்றம் கருத்து

செய்திப்பிரிவு

போதிய தகுதி இல்லாமல் கல்லூரிஉள்ளிட்ட உயர் கல்வி நிலையங்களில் மாணவர்கள் சேர்வதை தடுக்க வேண்டும் என டெல்லி உயர் நீதிமன்றம் தெரிவித்துள்ளது.

மத்திய பிரதேச மாநிலம் போபாலில் உள்ள எல்.என். தனியார் மருத்துவக் கல்லூரியில் கடந்த 2016-ம் ஆண்டு மாணவர்கள் சேர்க்கை நடைபெற்றது. இந்தியாவை பொறுத்தவரை, மத்தியஅரசின் கீழ் இயங்கும் மருத்துவக்கல்வித் துறையின் (டிஎம்இ) சார்பில் நடத்தப்படும் கலந்தாய்வில் பங்கேற்ற மாணவர்களுக்கு மட்டுமே மருத்துவக் கல்லூரிகளில் இடம் கிடைக்கும். ஆனால், இந்தகலந்தாய்வில் பங்கேற்காத 5 மாணவர்கள் எல்.என். மருத்துவக் கல்லூரியில் சேர்ந்தனர்.

இதுகுறித்து தகவலறிந்த இந்திய மருத்துவக் கவுன்சில், சம்பந்தப்பட்ட மருத்துவக் கல்லூரிக்கு 2017-ம் ஆண்டு நோட்டீஸ் பிறப்பித்தது. அதில், சம்பந்தப்பட்ட 5 மாணவர்களை உடனடியாக கல்லூரியில் இருந்து நீக்க வேண்டும் எனத் தெரிவிக்கப்பட்டது. ஆனால்,இதனை அந்தக் கல்லூரியோ,மாணவர்களோ பொருட்படுத்த வில்லை. மாறாக, அவர்கள் அடுத் தடுத்த வகுப்புகளுக்கு தேர்ச்சி பெற்று வந்தனர்.

ஒருகட்டத்தில், இந்திய மருத்துவக் கவுன்சிலின் நெருக்குதல் அதிகமாகவே, அந்த 5 மாணவர்களும் டெல்லி உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தனர். அதில், நீட் தேர்வில் அதிக மதிப்பெண் எடுத்ததன் பேரிலேயே தங்களுக்கு மருத்துவக் கல்லூரியில் சீட் கிடைத்ததாகவும், எனவே, இந்திய மருத்துவக் கவுன்சில் அனுப்பிய நோட்டீஸ்களை ரத்து செய்ய வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்திருந்தனர்.

இதனை கடந்த வாரம் விசாரித்த உயர் நீதிமன்றம், மருத்துவக் கல்வித் துறையின் கலந்தாய்வில் பங்கேற்காமல் கல்லூரியில் மாணவர்கள் சேர்க்கப்பட்டது தவறு என தீர்ப்பளித்தது. இதற்கு எதிராக மாணவர்கள் தரப்பில் மேல்முறையீடு செய்யப்பட்டது. இந்த மனு, நேற்று முன்தினம் விசாரணைக்கு எடுத்துக் கொள் ளப்பட்டது. அப்போது இருதரப்பு வாதங்களையும் கேட்ட பின்னர் நீதிபதி கூறியதாவது:

நீட் தேர்வில் வெற்றி பெற்றி ருந்தாலும் மருத்துவக் கல்வித் துறையின் கலந்தாய்வில் பங் கேற்ற பின்னரே, மருத்துவக் கல்லூரிகளில் மாணவர்களை சேர்க்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பு உள்ளது. ஆனால், இதற்கு மாறாக மனுதாரர்கள் கல்லூரியில் சேர்ந்துள்ளனர். அதுமட்டுமின்றி, 2017-ம்ஆண்டே இதுதொடர்பாக நோட்டீஸ் அனுப்பப்பட்டும் மாணவர்களும், கல்லூரியும் அதனை பொருட்படுத்தவில்லை. எனவே,மாணவர்களின் மனு நிராகரிக் கப்படுகிறது.

நம் நாட்டில் லட்சக்கணக்கான மாணவர்கள் மருத்துவம், பொறியியல் உள்ளிட்ட படிப்புகளில் சேர்வதற்காக கடினமாக உழைக்கின்றனர். போதிய தகுதி இருந்தும் கூடசில மாணவர்களால் கல்லூரிகளில் சேர முடியவில்லை. அப்படி இருக்கும்போது, இதுபோல் பின்வாசல் வழியாக கல்லூரி உள்ளிட்ட உயர்கல்வி நிலையங்களில் மாணவர்கள் நுழைவதை தடுக்க வேண்டும்.

இவ்வாறு தனது தீர்ப்பில் நீதிபதி தெரிவித்தார். - பிடிஐ

SCROLL FOR NEXT