இந்தியா முழுவதும் மெட்ரோ சேவை வழித்தடங்கள் 2022ம் ஆண்டில் 900 கிலோமீட்டராக உயரும் என மத்திய வீட்டுவசதி மற்றும் நகர் மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
மெட்ரோ ரயில்கள் முன்னணி நகரங்களில் போக்குவரத்து நெருக்கடியைக் குறைத்து விரைவான போக்குவரத்து சேவையை வழங்கி வருகின்றன. தற்போது 740 கிலோ மீட்டர் தொலைவுக்கு மெட்ரோ வழித்தடங்கள் உள்ளன. இது 2022ல் 900 கிலோ மீட்டராக உயரும் என மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி கூறியுள்ளார்.
டெல்லி மெட்ரோவின் நஜாஃப்கார்-தன்சா பேருந்து நிலையம் வரை ஒரு கிலோ மீட்டருக்கு மெட்ரோ சேவையை காணொலி மூலமாக தொடங்கி வைக்கையில் அவர் இதனை தெரிவித்தார். இதன்மூலம் லண்டன், நியூயார்க் போன்ற சர்வதேச தரத்திலான நகரங்களில் ஒன்றாக டெல்லி உருவெடுக்கும் என்று கூறினார்.
மேலும் நாட்டின் பல்வேறு நகரங்களில் 1000 கிலோ மீட்டர் தொலைவுக்கான மெட்ரோ வழித்தடங்கள் கட்டுமான நிலையில் உள்ளதாகவும், இதன்மூலம் மொத்தமாக மெட்ரோ சேவை வழித்தடங்களின் தொலைவு சில வருடங்களில் 2000 கிலோமீட்டராக இருக்கும் என்றும் அவர் கூறினார். - பிடிஐ