இந்தியா

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம்; கைதான தீவிரவாதியின் உறவினர் உ.பி.யில் சரண்: அலகாபாத் விரைந்தது டெல்லி போலீஸ்; மும்பையில் மற்றொருவர் கைது

செய்திப்பிரிவு

இந்தியாவில் தாக்குதல் நடத்த சதி திட்டம் தீட்டியது தொடர்பாக கைது செய்யப்பட்ட தீவிரவாதிகளில் ஒருவரின் உறவினர் உ.பி. போலீஸ் நிலையத்தில் சரண் அடைந்துள்ளார். மும்பையில் மற்றொருவர் கைது செய்யப் பட்டுள்ளார்.

இந்தியாவில் தாக்குதல் நடத்த நிழல் உலக தாதா தாவூத் இப்ராகிம், அவரது சகோதரர் மற்றும் பாகிஸ்தானின் உளவு அமைப்பான ஐஎஸ்ஐ ஆகியவை தொடர்ந்து சதி திட்டம் தீட்டி வருகின்றன. இதுகுறித்து டெல்லி போலீஸார் தீவிர கண்காணிப்பில் ஈடுபட்டு வந்தனர். இந்நிலையில், கடந்த செவ்வாய்க்கிழமை டெல்லி, உ.பி., மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் 6 பேரை டெல்லி சிறப்புப் பிரிவு போலீஸார் கைது செய்தனர்.

அவர்களில் 2 பேர் தாவூத் கும்பலுக்காக வேலை செய்யும் பயிற்சி பெற்ற தீவிரவாதிகள் என்பது விசாரணையில் தெரிய வந்தது. இதுகுறித்து டெல்லி சிறப்புப் பிரிவு அதிகாரி நீரஜ் தாக்குர் நேற்று கூறும்போது, ‘‘மகாராஷ்டிராவைச் சேர்ந்த ஜான் முகமது ஹேக் (எ) சமீர் காலியா (47), ஜமியா நகரை சேர்ந்த ஒசாமா (எ) சமி (22), ரேபரேலியை சேர்ந்த மூல்சந்த் (எ)சாஜு (47), அலகாபாத்தை சேர்ந்த முகமது ஜீசன் கமார் (28), பரேய்ச் பகுதியை சேர்ந்த முகமது அபுபக்கர் (23), லக்னோவைச் சேர்ந்த முகமது அமீர் ஜாவீத் (31) ஆகியோர் கைது செய்யப்பட்டுள்ளனர்’’ என்றார்.

இந்நிலையில், கைது செய்யப் பட்ட தீவிரவாதி ஒசாமா (எ) சமியின் உறவினர் உமைதுர் உர் ரகுமான் என்பவர் உத்தர பிரதேச மாநிலம் கரேலி போலீஸ் நிலையத்தில் கடந்த வெள்ளிக்கிழமை மாலை சரண் அடைந்துள்ளார். இவர் ஐஎஸ்ஐ அமைப்புடன் நெருங்கிய தொடர்பு வைத்திருக்கிறார் என்று விசாரணையின் போது சமி தெரிவித்துள்ளார்.

அவரை கைது செய்வதற்காக டெல்லி சிறப்பு பிரிவு போலீஸார் அலகாபாத் விரைந்துள்ளனர். இதற்கிடையில், வெள்ளிக்கிழமை இரவு மும்பையில் ஜாகீர் உசைன் ஷேக் என்பவரை போலீஸார் கைது செய்துள்ளனர். இவரும் தாவூத் கும்பலுடன் தொடர்பு கொண்டவர்.

இவர்கள் அனைவரும் டெல்லி, உ.பி., மகாராஷ்டிரா ஆகிய மாநிலங்களில் விழாக்களின் போது மிகப்பெரும் தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன் செயல்பட்டு வந்துள்ளது விசாரணையில் தெரிய வந்துள்ளது.

இதுகுறித்து டெல்லி சிறப்பு பிரிவு போலீஸ் அதிகாரிகள் கூறும்போது, ‘‘கடந்த 1993-ம் ஆண்டு மும்பையில் நடத்தப்பட்ட தொடர் குண்டுவெடிப்புகளைப் போல தற்போது தாக்குதல் நடத்தும் சதி திட்டத்துடன் இவர்கள் செயல்பட்டு வந்துள்ளனர். விசார ணையின் போது சமி மற்றும் கைது செய்யப்பட்டவர்கள் வெவ்வேறு உண்மைகளை ஒப்புக் கொண்டுள்ளனர்’’ என்று தெரிவித்தனர். மேலும், இவர்களில் ஜான் முகமது ஷேக் என்பவர் தாவூத் இப்ராகிமின் சகோதரர் அனீஸ் இப்ராகிமுடன் நெருங்கிய தொடர்பில் இருந்திருக்கிறார். அவர் கூறியபடி ஜான் முகமது ஷேக் இந்தியாவில் தாக்குதல் நடத்த பல்வேறு திரை மறைவு வேலைகளில் ஈடுபட்டு வந்துள்ளார் என்று அதிகாரிகள் தெரிவித்தனர்.

SCROLL FOR NEXT