தெலுங்கானா மாநிலம் கரீம்நகர் மாவட்டத்தில் உள்ளது உசூராபாத் தொகுதி. இதன் எம்எல்ஏ ஈடல ராஜேந்தர் பதவி விலகியதால் இங்கு விரைவில் இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது.
முதல்வர் கே.சந்திரசேகர ராவ் தலைமையிலான தெலங்கானா ராஷ்டிர சமிதி (டிஆர்எஸ்) அரசில் மருத்துவத் துறை அமைச்சராக இருந்த ஈடல ராஜேந்தர், கடந்த மே மாதம் பதவியிலிருந்து நீக்கப் பட்டார். இதையடுத்து எம்எல்ஏ பதவியை ராஜினாமா செய்த அவர், கட்சியை விட்டு விலகி பாஜகவில் இணைந்தார்.
பாஜக சார்பில் உசூராபாத் தொகுதியில் ஈடல ராஜேந்தர் மீண்டும் போட்டியிடுகிறார். இவரை ஆதரித்து மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா நேற்று முன்தினம் பிரச்சாரம் செய்தார். அப்போது அவர் பேசியதாவது: நிஜாம் மன்னர்களின் கட்டுப்பாட்டில் இருந்த ஹைதராபாத் மாகாணம் கடந்த 1948-ம்ஆண்டு செப்டம்பர் 17-ம் தேதிசுதந்திர இந்தியாவுடன் அதிகாரப் பூர்வமாக இணைக்கப்பட்டது.
ஆனால் ஏஐஎம்ஐஎம் கட்சி யுடன் டிஆர்எஸ் ரகசியக் கூட்டணி வைத்துள்ளதால் இந்த நாளை முதல்வர் சந்திரசேகர ராவ் விழா எடுத்து கொண்டாட விரும்பவில்லை. ஆனால் தெலங்கானாவில் பாஜக ஆட்சிக்கு வந்தவுடன் செப்டம்பர் 17-ம் தேதி, ஹைதராபாத் விடுதலை தினமாக கொண்டாடப்படும்.
2024-ல் நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தல் மற்றும் அனைத்து மாநில தேர்தல்களில் பாஜகவும் அதன் கூட்டணிக் கட்சி களும் வெற்றி பெறும். இவ்வாறு அமித் ஷா பேசினார். - பிடிஐ