இந்தியா

ஜெயலலிதா சொத்து குவிப்பு மேல்முறையீட்டு வழக்கில் குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்: 2-வது நாளாக கர்நாடக தரப்பு இறுதி வாதம்

இரா.வினோத்

ஜெயலலிதா உள்ளிட்ட நால்வர் மீதான சொத்துக்குவிப்பு மேல் முறையீட்டு வழக்கு உச்ச நீதி மன்றத்தில் நடந்து வருகிறது.

நீதிபதிகள் பினாகி சந்திர கோஷ், அமித்வா ராய் ஆகியோர் அடங்கிய அமர்வு முன்னிலையில் நேற்று நடந்த விசாரணையின் போது, கர்நாடக அரசு தரப்பு வழக் கறிஞர் துஷ்யந்த் தவே, 2-ம் நாளாக தனது இறுதிவாத‌த்தை முன் வைத்தார். அவர் வாதிட்டதாவது:

பெங்களூரு சிறப்பு நீதிமன்ற நீதிபதி ஜான் மைக்கேல் டி'குன்ஹா தனது தீர்ப்பில் சொத்துக்குவிப்பு வழக்கின் சாட்சியங்கள், அரசு சான்று ஆவணங்களை மிக நுட்ப மாக ஆராய்ந்துள்ளார். ஜெய லலிதா தரப்பு ரூ.55 கோடி வரு மானத்துக்கு அதிகமாக சொத்து சேர்த்ததாக சுட்டிக்காட்டியுள்ளார்.

நீதிபதி குன்ஹா கட்டுமான செலவு குறித்து சுமார் 100 பக்கங் களில் அலசி ஆராய்ந்த விவ காரத்தை, நீதிபதி குமாரசாமி வெறும் மூன்றே பக்கங்களில் கடந்து சென்றுள்ளார். நீதிபதி குமார சாமியின் தீர்ப்பில் ஜெயலலிதா தரப்பினர் தாக்கல் செய்த கட்டுமான மதிப்பை ஏற்பதற்கு எந்த விளக்க மும் குறிப்பிடப்பட‌வில்லை.

நீதிபதி குன்ஹா, நமது எம்ஜிஆர் நாளிதழுக்கு ரூ. 14 கோடி சந்தா தாரர்கள் மூலம் வரவில்லை என ஆதாரத்துடன் நிரூபித் துள்ளார்.

நீதிபதி குன்ஹா, சுதாகரனின் திருமணத்துக்கு ரூ. 3 கோடி செலவா னதாக கணக்கிட்டுள்ளார். ஆனால் நீதிபதி குமாரசாமி ரூ. 28 லட்சம் மட்டுமே செலவு செய்யப்பட்டதாக வும், மீதி செலவை மணமகளின் தாய்மாமன் ராம்குமார் ஒத்துக் கொண்டதாகவும் கூறியுள்ளார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி பினாகி சந்திரகோஷ், 'சுதாகரனின் திருமண செலவு தொடர்பான கணக்குகள் தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் ஒரு விதமாக இருக் கிறது. கர்நாடக அரசு வேறுவிதமாக கூறுகிறது.

ஜெயலலிதா தரப்பு புதுவிதமாக சொல்கிறார்கள். நீதிபதி குமாரசாமி புதிய கணக்கை தீர்ப்பில் குறிப்பிடுகிறார். எல்லா வற்றையும் சரியாக கணக்கிட புதிய கால்குலேட்டர் வாங்குங்கள்' என கூறிய போது, நீதிமன்றத்தில் சிரிப்பலை எழுந்தது.

தவே தொடர்ந்து வாதிடும் போது, “நீதிபதி குன்ஹா பரிசுப் பொருட்களை ஜெயலலிதாவின் வ‌ருமானமாக‌ கணக்கிட்டுள்ளார் என்றார்.

அப்போது குறுக்கிட்ட நீதிபதி பினாகி சந்திரகோஷ், “ 1991-96 கால கட்டத்தில் ஜெயலலிதா வருமான வரி தாக்கல் செய்தாரா?” என கேள்வி எழுப்பினார். அதற்கு வழக் கறிஞர் துஷ்யந்த் தவே, “1991-96 காலக்கட்டதுக்கான வருமான வரியை ஜெயலலிதா சொத்துக் குவிப்பு வழக்கில் குற்றப்பத் திரிக்கை தாக்கல் செய்யப்பட்ட பிறகே, தாக்கல் செய்தார். வருமான வரித்துறை ஏற்றுக்கொண்டதாலே ஜெயலலிதாவின் வருமானம் சட்டப்பூர்வமானது என ஏற்க முடியாது. எனவே நீதிபதி குமாரசாமியின் தீர்ப்பை ரத்து செய்துவிட்டு, வழக்கின் சாட்சியங்கள், அரசு சான்று ஆவணங்களை ஆராய்ந்து நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்ய வேண்டும்''என வாதிட்டார்.

SCROLL FOR NEXT