இந்தியா

காப்பு சமுதாயத்தினர் போராட்டம் தீவிரம்: கிழக்கு கோதாவரியில் போலீஸ் படைகள் குவிப்பு

பிடிஐ

பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி காப்பு சமுதாயத்தினரை நிகழ்த்திய வன்முறை எதிரொலியாக கிழக்கு கோதாவரியில் கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

இது குறித்து காவல்துறை மூத்த அதிகாரி ஒருவர் கூறும்போது, "பதற்றமான சூழல் நிலவுவதாக கிழக்கு கோதாவரிக்கு கூடுதல் போலீஸ் படைகள் வரவழைக்கப்பட்டுள்ளன. அனைத்து இடங்களும் காவல்துறை கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவரப்பட்டுள்ளன. இத்தகைய வன்முறையை நாங்கள் சற்றும் எதிர்பார்க்கவில்லை.

கலவரத்தில் 15-க்கும் மேற்பட்ட காவலர்கள் காயமடைந்துள்ளனர். எந்த தரப்பிலும் உயிர்ச்சேதம் இல்லை. தீவிர விசாரணை மேற்கொண்டு கலவரத்தில் ஈடுபட்டவர்கள் மீது தனித்தனியே வழக்குப் பதிவு செய்து வருகிறோம்" என்றார்.

நேற்று (ஞாயிற்றுக்கிழமை) ஆந்திராவின் கிழக்கு கோதாவரி மாவட்டத்தில், காப்பு சமுதாயத்தினர் பிரம்மாண்ட மாநாடு நடத்தினர். தங்களை பிற்படுத்தப்பட்டோர் பிரிவில் சேர்க்கக் கோரி அவர்கள் நடத்திய மாநாட்டை தொடர்ந்து நடைபெற்ற சாலை, ரயில் மறியல் போராட்டத்தின்போது வன்முறை வெடித்தது.

அவ்வழியாகச் சென்ற ரத்னாஞ்சல் எக்ஸ்பிரஸ் ரயிலுக்கு தீ வைக்கப்பட்டது. இதில் 8 பெட்டிகள் எரிந்து நாசமாகின. அங்குள்ள போலீஸ் நிலையம் தீ வைத்து கொளுத்தப்பட்டது. இதனால் ஆந்திராவில் திடீரென பதற்றமான சூழ்நிலை உருவாகியுள்ளது.

இந்நிலையில், காப்பு சமுதாயத்தினர் போராட்டம் எதிரொலியாக கிழக்கு கோதாவரியில் கூடுதல் போலீஸ் படை குவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையே மாநில முனிசிபல் நிர்வாக அமைச்சர் பி.நாரயணா, "காப்பு சமுதாய தலைவரும் முன்னாள் அமைச்சருமான முத்ரகடா பத்மநாபமே அனைத்து வன்முறைகளுக்கும் காரணம்" என குற்றஞ்சாட்டியுள்ளார்.

கிழக்கு கோதாவரி சம்பவம் தொடர்பாக ஒய்.எஸ்.ஆர் காங்கிரஸ் தலைவர் ஜெகன்மோகன் ரெட்டி, ஜனசேனா கட்சி நிறுவனர் பவன் கல்யாண் ஆகியோர் இன்று செய்தியாளர்களை சந்திப்பதாக அறிவித்துள்ளனர்.

கிழக்கு கோதாவரி சம்பவம் ஆந்திர அரசியலில் பெரும் சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

SCROLL FOR NEXT