கேரளாவின் பாலக்காடு அருகில் உள்ள அயலூரை சேர்ந்த வர் வேலாயுதன். இவரது மகள் சஜிதா. இவர் கடந்த 2010-ம் ஆண்டு மாயமானார். குடும்பத்தினர் போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். ஆனால் சஜிதாவை கண்டுபிடிக்க முடியவில்லை. ஆனால், அதே பகுதியில் உள்ள காதலன் ரஹ்மான் இல்லத்தில் சஜிதா தலைமறைவாக வாழ்ந்து வந்துள்ளார். இருவரும் பல ஆண்டுகள் ஒரே அறையில் தங்கி யிருந்தது யாருக்குமே தெரியாமல் இருந்துள்ளது.
குடும்பத்தினருடன் ஏற்பட்ட கசப்புணர்வால் இந்த ஆண்டு தொடக்கத்தில் வீட்டில் இருந்து ரஹ்மான் வெளியேறினார். அவரை காணவில்லை என்று குடும்பத்தினர் நென்மாரா போலீஸ் நிலையத்தில் புகார் கொடுத்தனர். எனினும் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை.
கடந்த ஜூன் மாதம் ரஹ்மானின் சகோதரர் பஷீர், பக்கத்துக்கு கிராமத்தில் ஒரு பெண்ணோடு ரஹ்மான் வாழ்ந்து வருவதை கண்டுபிடித்தார். அப்போதுதான் ரஹ்மானும் சஜிதாவும் 11 ஆண்டு ஒரே அறையில் வாழ்ந்தது தெரிய வந்தது. இருவரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டனர். அப்போது தம்பதியாக சேர்ந்து வாழ இருவரும் விருப்பம் தெரிவித்தனர். இதை நீதிமன்றம் ஏற்றுக் கொண்டது.
இந்த சூழலில் நென்மாரா சார் பதிவாளர் அலுவலகத்தில் ரஹ்மானும் சஜிதாவும் நேற்று முன்தினம் சட்டப்பூர்வமாக திருமணம் செய்து கொண்டனர். நென்மாரா எம்எல்ஏ பாபு மணமக்களை நேரில் வாழ்த்தினார். இந்த திருமணத்தில் சஜிதாவின் குடும்பத்தினர் பங்கேற்றனர். ரஹ்மான் குடும்பத்தினர் கலந்து கொள்ளவில்லை. புதுமண தம்பதியருக்கு புதிய வீடு கட்டித் தர எம்எல்ஏ பாபு உதவி செய்வதற்காக கூறியுள்ளார்.