சொத்துக்குவிப்பு வழக்கில் சசிகலா, இளவரசி ஆகியோரின் 4 ஆண்டு சிறை தண்டனை முடிந்த பிறகு விடுதலை செய்யப்பட்டனர். ஆனால், சுதாகரன் ரூ.10 கோடி அபராதம் செலுத்தாததால், கூடுதலாக ஓராண்டு சிறை தண்டனையை அனுபவிக்கிறார்.
இது தொடர்பாக சுதாகரனுக்கு நெருக்கமானோர் கூறியதாவது: சொத்துக்குவிப்பு வழக்கைப் பொறுத்தவரை ஜெயலலிதா, சசிகலா, இளவரசியை காட்டிலும் அதிக நாட்கள் சிறையில் இருந்தது சுதாகரன்தான். 1996-ல் இவ்வழக்கு போடப்பட்ட போதே அவர் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் தீர்ப்பு வழங்கிய போதும் சுதாகரன் சிறை தண்டனை அனுபவித்தார்.
2017-ம் ஆண்டு பிப்ரவரி 15-ம் தேதிக்கு பிறகு அவர் இதுவரை வெளியே வரவில்லை. சசிகலாவும் இளவரசியும் கூட இருமுறை பரோலில் வெளியே வந்து சென்றனர். ஆனால் சுதாகரன் வெளியே வரவில்லை. சசிகலா, இளவரசி மீது சிறை முறைகேடு புகார் எழுந்ததைப் போல சுதாகரன் மீது எவ்வித புகாரும் எழவில்லை.
சிறை விடுமுறை நாட்கள், இறுதித் தீர்ப்புக்கு முன்பு சிறையில் இருந்த நாட்கள் ஆகியவற்றை கணக்கிட்டால் சுதாகரன் இன்னும் ஒரு மாதத்திற்குள் விடுதலை செய்யப்பட வேண்டும். ஆனால் கர்நாடக சிறைத்துறை இதுவரை விடுதலை தொடர்பாக எவ்வித தகவலும் தெரிவிக்காததால் அவரது குடும்பத்தினர் வருத்தம் அடைந்துள்ளனர். இவ்வாறு அவர்கள் கூறினர்.