கேரளாவில் உள்ள புகழ்பெற்ற பத்மநாப சுவாமி கோயில் அறக்கட்டளையில் முறைகேடு நடந்திருப்பதாக எழுந்த புகாரைத் தொடர்ந்து கடந்த 25 ஆண்டுகால கணக்குகளை தணிக்கை செய்ய வேண்டும் என்று கோயிலின் நிர்வாகக் கமிட்டிக்கு உச்ச நீதிமன்றம் கடந்த ஆண்டு உத்தரவிட்டது. இதை எதிர்த்தும் தணிக்கையில் இருந்து விலக்கு அளிக்கக் கோரியும் உச்ச நீதிமன்றத்தில் அறக்கட்டளை சார்பில் வழக்கு தொடரப்பட்டது. நேற்று இவ்வழக்கு நீதிபதிகள் யூ.யூ.லலித், ரவீந்திர பட், பெலா எம்.திரிவேதி ஆகியோர் கொண்ட அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது, நிர்வாகக் கமிட்டியின் சார்பில் ஆஜரான வழக்கறிஞர் ஆர்.பசந்த், ‘‘கேரளாவில் அனைத்து கோயில்களும் மூடப்பட்டுள்ளன. பத்மநாப சுவாமி கோயில் நிதி நெருக்கடி காரணமாக கடினமான நேரத்தை சந்தித்து வருகிறது. கோயிலின் செலவுகளை சமாளிக்க காணிக்கைகள் போதுமானதாக இல்லை. மாதம் ரூ.1.25 கோடி செலவாகிறது. ரூ.60 முதல் 70 லட்சம் வரையே பெற முடிகிறது. நீதிமன்ற உத்தரவுப்படி அமைக்கப்பட்ட அறக்கட்டளை உள்ளது. அந்த அறக்கட்டளை கோயிலுக்கு நிதி வழங்க வேண்டும். அறக்கட்டளை கணக்குகள் தணிக்கை செய்யப்பட வேண்டும்’’ என்று கோரினார். இதற்கு கோயிலின் அறக்கட்டளை சார்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் அர்விந்த் தத்தார் எதிர்ப்பு தெரிவித்தார். இருதரப்பு வாதங்களைக் கேட்ட நீதிபதிகள், இது தொடர்பாக உத்தரவை தள்ளிவைப்பதாக அறிவித்தனர்.