அயோத்தியில் கட்டப்பட்டு வரும் ராமர் கோயிலின் அஸ்திவாரப் பணிகள் முடிவடைந்துள்ளதாக அதன் அறக்கட்டளை நிர்வாகம் தெரிவித்துள்ளது.
கோயில் கட்டுமானப் பணிகள்2023-ம் ஆண்டு இறுதிக்குள் முடிவடைந்து மக்கள் வழிபாட்டுக்கு திறந்து விடப்படும் எனவும் தெரி விக்கப்பட்டுள்ளது.
அயோத்தியில் பாபர் மசூதி இடிக்கப்பட்ட பிறகு, அந்த இடத்தில் ராமர் கோயில் கட்ட தீர்மானிக்கப்பட்டது. ஆனால், இதற்கு எதிராக இஸ்லாமிய அமைப்புகள் வழக்கு தொடுத்ததால் அங்கு ராமர் கோயிலை கட்டுவது சாத்தியமாகவில்லை.
நீண்டகாலமாக நடைபெற்று வந்த இந்த வழக்கில், உச்ச நீதிமன்றம் கடந்த 2019-ம் ஆண்டு வரலாற்று சிறப்புமிக்க தீர்ப்பை வழங்கியது. அதில், அயோத்தியில் சர்ச்சைக்குரிய 2.77 ஏக்கர் இடத்தில் ராமர் கோயிலை கட்டுவதற்கு அனுமதி வழங்கப்பட்டது.
இந்த தீர்ப்பை அடுத்து, அந்தப் பகுதியில் பிரம்மாண்டமான ராமர் கோயில் கட்டுவதற்கான நடவடிக்கையில் மத்திய அரசு தீவிரமாக இறங்கியது. இதற்காக ரூ.1000 கோடி செலவாகும் எனக் கணக்கிடப்பட்டது. மேலும், கோயில் கட்டுமானப் பணிகளை மேற்பார்வையிட ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளையும் உருவாக்கப்பட்டது.
ஆனால், கரோனா பரவல் காரணமாக கோயில் கட்டுமானப் பணிகளில் திடீர் தாமதம் ஏற்பட்டது. பின்னர், வைரஸ் பரவல் கட்டுக்குள் வந்ததை அடுத்து, கடந்த ஆண்டு ஆகஸ்ட் மாதம் 5-ம் தேதி பிரதமர் நரேந்திர மோடி புதிய ராமர் கோயிலுக்கான அடிக்கல்லை நாட்டினார். இதனையடுத்து, கோயில் கட்டுமானப் பணிகள் துரிதமாக நடைபெற்று வந்தன.
அந்த வகையில், கோயிலின்அஸ்திவாரப் பணிகள் முடிவடைந் துள்ளதாக ராமஜென்ம பூமி தீர்த்த ஷேத்ரா அறக்கட்டளை நேற்று தெரிவித்துள்ளது.
இதுகுறித்து அந்த அறக் கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறியதாவது:
கோயில் கட்டப்படும் இடத்தில் இருக்கும் மண்ணின் தரம் மிகவும் மோசமாக இருந்தது. எனவே அதிக ஆழத்துடன் அஸ்திவாரம் அமைத்தால்தான் கோயில் வலுவானதாக இருக்கும். அதன்படி, 400 அடி ஆழம் அஸ்திவாரம் தோண்டப்பட்டு சிமெண்ட் கலவை, சிறிய கற்கள், கட்டிடப் பொருட்கள் உள்ளிட்டவற்றால் நிரப்பப்பட்டது. தற்போது அவை 48 அடுக்கு கான்க்ரீட்டால் மூடப்பட்டுள்ளது. இதன் மூலம் கோயில் அஸ்திவாரப் பணிகள் வெற்றிகரமாக நிறை வடைந்திருக்கின்றன.
அடுத்தக்கட்டமாக, இந்த கான்க்ரீட் பூச்சின் மீது கிரானைட் கற்கள் பதிக்கும் பணிகள் விரைவில் தொடங்கவுள்ளது. இதற்காக கர்நாடகாவில் இருந்து கிரானைட் கற்கள் கொண்டு வரப்படவுள்ளன. இனி கட்டுமானப் பணி வேகமாக நடைபெறும். வரும் 2023-ம் ஆண்டு இறுதிக்குள் புதிய ராமர் கோயில் கட்டப்பட்டு பொதுமக்கள் வழிபாட்டுக்கு திறக்கப்பட்டு விடும்.
இவ்வாறு அறக் கட்டளையின் பொதுச்செயலாளர் சம்பத் ராய் கூறினார்.