சையத் ஈசாக் 
இந்தியா

எரிக்கப்பட்ட நூலகத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க போராடும் முதியவர்: நன்கொடையாக குவிந்த ரூ. 35 லட்சம், 10 ஆயிரம் நூல்கள்

இரா.வினோத்

கர்நாடக மாநிலம் மைசூருவில் உள்ள ராஜீவ் நகரை சேர்ந்தவர் சையத் ஈசாக் (63). கூலி தொழிலாளியான இவர் கடந்த 10 ஆண்டுகளாக அரசு புறம்போக்கு நிலத்தில் நூலகம் நடத்தி வந்தார். அதில் கன்னடம், ஆங்கிலம், உருது மொழிகளை சேர்ந்த‌ இலக்கிய நூல்கள், இந்து, முஸ்லிம், கிறிஸ்துவம் உள்ளிட்ட மதங்களை சேர்ந்த நூல்கள் உட்பட 11 ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்களை இருந்தன. சில கன்னட அமைப்பினர், நூலகத்தில் கன்னட நூல்களை விட உருது நூல்கள் அதிகமாக இருப்பதற்கு எதிர்ப்பு தெரிவித்தனர்.

இந்நிலையில் கடந்த ஏப்ரல் 20-ம்தேதி நள்ளிரவில் மர்ம நபர்கள் நூலகத்துக்கு தீ வைத்தனர். இதில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட நூல்கள் எரிந்து சாம்பலாயின. இதுகுறித்து மைசூரு போலீஸார் வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்திவருகின்றனர்.

இதனிடையே மைசூர் பல்கலைக்கழக அரசியல் அறிவியல் துறையின் தலைவர் பேராசிரியர் முசாஃபர் ஆசாத், எரிந்த நூலகத்துக்கு மீண்டும் உயிர்கொடுக்க முன்வந்தார். அவர் தலைமையில் 'சையத் ஈசாக் நூலகம் புதுப்பிப்பு குழு' அமைக்கப்பட்டு நன்கொடைகள் வசூலிக்கப்பட்டது. இதற்கு அமெரிக்கா, கனடா, இங்கிலாந்து, பிரான்ஸ், துபாய் உள்ளிட்ட வெளிநாடுகளை சேர்ந்தவர்களும், கேரளா, மகாராஷ்டிரா, தமிழ்நாடு ஆகிய மாநிலங்களை சேர்ந்த வர்களும் 8,000-க்கும் மேற்பட்ட நூல்களை அனுப்பியுள்ளனர். இதுவரை ரூ.35 லட்சம் பணமாகவும் வழங்கியுள்ளனர்.

இதுகுறித்து பேராசிரியர் முசாஃபர் ஆசாத் கூறும்போது, ‘‘உலகெங்கிலும் இருந்து புத்தகங்கள் வந்து கொண்டே இருக்கின்றன. பல்கலைக்கழகத் தில் எனது அறையில் மட்டும் 5,000 நூல்கள் அடுக்கி வைக்கப் பட்டுள்ளன. எனது அறை நிரம்புவதற்குள் அரசு சையத் ஈசாக்கிற்கு புதிய நூலகத்தை கட்டித்தர வேண்டும். புதிய நூலகத்தை அரசு அமைத்துக் கொடுத்தால் வசூலிக்கப்பட்ட ரூ. 35 லட்சம் நன்கொடையை அதை அளித்தவர்களுக்கே திருப்பி அளிக்கப்படும்'' என்றார்.

சையத் ஈசாக் கூறியதாவது:

நான் கொத்தடிமையாக வாழ்க் கையை தொடங்கியவன். 20 ஆண்டுகள் துப்புரவு ஊழியராக வேலை செய்திருக்கிறேன். அதன் பிறகு டீக்கடை நடத்தியபோது, வாடிக்கையாளர்கள் தான் எனக்கு செய்தித்தாள் படிக்க கற்றுக் கொடுத்தார்கள். வாசிப்பின் மூலம் எனக்கு கிடைத்த சந்தோஷத்திலேயே, 2011-ம் ஆண்டு சிறிய நூலகம் தொடங்கினேன்.

அதை பொறுத்துக் கொள்ள முடியாமல் மர்ம நபர்கள் அதனை தீ வைத்து எரித்துள்ளனர். தேசிய நூலக தினமான ஆகஸ்ட் 12-ம் தேதி புதிய நூலகத்துக்கு அடிக்கல் நாட்டுவதாக அதிகாரிகள் கூறினர். ஆனால் இதுவரை நூலகம் கட்டித் தரவில்லை. ஆனால் என் மீது நம்பிக்கை வைத்து ஏராளமானோர் பல ஆயிரம் கிலோ மீட்டர் தூரத்தில் இருந்து புத்தகங்களையும், பணத்தையும் அனுப்புகின்றனர். அரசாங்கம் நூலகம் கட்டித்தராவிட்டால், நாங்களே கட்டித் தருகிறோம் என ஆறுதலாகவும் பேசுகிறார்கள். தற் போது தெருவில் நூல்களை போட்டு வாசகர்களுக்கு எனது சேவையை வழங்கி வருகிறேன்''என்றார்.

பொது நூலகத் துறை துணை இயக்குநர் மஞ்சுநாத் கூறும்போது, ‘‘நூலகத் துறையும், மைசூரு மாநகராட்சியும் சமமாக செலவு செய்து சையத் ஈசாக் கிற்கு நூலகம் கட்ட முடி வெடுக்கப்பட்டது. மாநகராட்சி ஆணையர், இணை ஆணையர் இடமாற்றம் செய்யப்பட்டதாலும், மேயர் தேர்தல் காரணமாகவும் அதை நிறைவேற்ற முடியவில்லை. மாநகராட்சி இடத்தை வழங்கியதும் நடவடிக்கை எடுக்கப்படும்’’ என்றார்.

SCROLL FOR NEXT