பாட்டியாலா ஹவுஸ் நீதிமன்றத்தில் ஜே.என்.யூ. மாணவர் தலைவர் கண்ணய்ய குமார் தாக்கப்படவில்லை என்று டெல்லி போலீஸ் கமிஷனர் பி.எஸ். பாஸி தெரிவித்துள்ளார்.
நீதிமன்றத்தில் ஆஜராக இன்று கண்ணய்ய குமாரை அழைத்து வந்த போது, கோர்ட் வளாகத்தில் வன்முறை வெடித்தது பற்றி கடும் விமர்சனங்களுக்கு ஆளான நிலையில் டெல்லி போலீஸ் கமிஷனர் பாஸி, வழக்கறிஞர்களுக்கு எதிராக பெரிய அளவில் போலீஸ் படையை குவிப்பது எதிர்மறை விளைவுகளையே ஏற்படுத்தும் என்றார்.
அவர் கூறும்போது, “கண்ணய்ய குமார் தாக்கப்பட்டதாக நான் கருதவில்லை. கோர்ட் வளாகத்தில் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. நாங்கள் தள்ளுமுள்ளு ஏற்படும் என்பதை எதிர்பார்த்ததால் அவருக்கு பாதுகாப்பு அளிக்க போதிய போலீஸார் தேவைப்பட்டது. எங்கள் அதிகாரிகளால் அவர் பாதுகாப்பு பெற்றார்.
எனவே கோர்ட்டில் இன்று நடந்த சம்பவங்கள் கைமீறிச் சென்றதாக நீங்கள் கருதுவது கூடாது என்றே நான் நினைக்கிறேன்.
நிலைமைகளை நாங்கள் நன்றாகவே கட்டுப்படுத்தினோம், அமைதிக்கு எந்த வித பாதிப்பும் நிகழவில்லை. கவனமாகவே போலீஸ் நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது” என்றார்.