பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினத்தையொட்டி நாடு முழுவதும் இன்று மாலை வரை 2 கோடிக்கும் அதிகமான கரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டு சாதனை படைக்கப்பட்டுள்ளது.
பிரதமர் மோடியின் 71-வது பிறந்ததினம் இன்று கொண்டாடப்படுவதையடுத்து, மிகப்பெரிய அளவில் கரோனா தடுப்பூசி எண்ணிக்கையை எட்ட மத்திய அரசு திட்டமிட்டது. இன்று 2.50 கோடி பேருக்கு கரோனா தடுப்பூசி செலுத்தி சாதனை நிகழ்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டது. இதற்கு முன் ஒரு கோடி தடுப்பூசி ஒரே நாளில் செலுத்தப்பட்டிருந்தாலும் 2.50 கோடி என்ற எண்ணிக்கையை எட்டியதில்லை, அதை அடை மத்திய அரசு இலக்கு நிர்ணயித்தது.
இந்த நிலையில், நாடு முழுவதும் மதியம் 1.30 மணி நிலவரப்படி ஒரு சில மணிநேரங்களில் 1 கோடி கரோனா தடுப்பூசிகள் செலுத்தப்பட்டன. இந்தநிலையில் இந்த சாதனை முயற்சியில் மாலை வரை 2,03,22,283 டோஸ் தடுப்பூசி போடப்பட்டதாக மத்திய அரசின் கோவின் இணைய தளத்தில் தகவல் வெளியிடப்பட்டுள்ளது.
இதன் மூலம் கரோனா வைரஸுக்கு எதிராக நாடு முழுவதும் வழங்கப்பட்ட மொத்த தடுப்பூசிகளின் எண்ணிக்கையை 78.68 கோடியாக உயர்ந்துள்ளது. இது ஒரு மாதத்தில் நான்காவது முறையாக தினசரி தடுப்பூசி ஒரு கோடியை கடக்க உதவியது.
மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில் கோவிட் -19 க்கு எதிரான போராட்டத்தில் இந்தியா மற்றொரு சாதனையுடன் வெள்ளிக்கிழமை இரண்டு கோடி டோஸுடன் முன்னேறியதாக தெரிவித்துள்ளது. இன்று மொத்தமாக 2.50 கோடி தடுப்பூசிகள் செலுத்த இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ள நிலையில் பகல் பொழுதிலேயே 2 கோடிக்கும் அதிகமான தடுப்பூசிகள் செலுத்தப்பட்டுள்ளன.