கோப்புப்படம் 
இந்தியா

மருத்துவர்கள், செவிலியர்களுக்கு உளவியல்ரீதியான பாதிப்பு ஏற்படுத்திய கரோனா தொற்று: ஐசிஎம்ஆர் ஆய்வில் தகவல்

ஏஎன்ஐ

மருத்துவர்கள், செவிலியர்கள் உள்ளிட்ட சுகாதாரப் பணியாளர்களுக்கு கரோனா தொற்று உளவியல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளதாக ஐசிஎம்ஆர் நடத்திய ஆய்வில் தெரியவந்துள்ளது.

அதிகமான வேலைப்பளு, அழுத்தம், பிரச்சினைகளைச் சமாளிப்பது, கூடுதலாகப் பொறுப்புகள், புதுவிதக் கட்டுப்பாடுகளுக்குத் தங்களை உட்படுத்திக் கொள்ளுதல் போன்றவற்றால் சுகாதாரப் பணியாளர்கள் உளவியல்ரீதியான பாதிப்புக்கு ஆளாகியுள்ளதாக ஆய்வு தெரிவிக்கிறது.

ஐசிஎம்ஆர் நடத்திய இந்த ஆய்வின் அறிக்கை இந்திய மருத்துவ ஆராய்ச்சி இதழில் வெளியிடப்பட்டுள்ளது. நாட்டின் 10 நகரங்களில் 967 பேரிடம் இந்த ஆய்வு நடத்தப்பட்டது. இதில் 54 சதவீதம் பேர் பெண்கள், 46 சதவீதம் பேர் ஆண்கள். ஆய்வில் பங்கேற்றவர்களின் வயது 20 முதல் 40 வயதாகும்.

புவனேஷ்வர், மும்பை, அகமதாபாத், நொய்டா, தெற்கு டெல்லி, பத்தினம்திட்டா, காசர்கோடு, சென்னை, ஜபல்பூர், கம்ரூப், கிழக்கு காசிஹில்ஸ் ஆகிய நகரங்களைச் சேர்ந்தவர்கள் ஆய்வில் பங்கேற்றனர்.

ஐசிஎம்ஆர் நடத்திய இந்த ஆய்வில் கூறப்பட்டுள்ளதாவது:

''கரோனா வைரஸ் பெருந்தொற்று சுகாதாரப் பணியாளர்களுக்கு மனரீதியான பிரச்சினைகளை அதிகம் ஏற்படுத்தியுள்ளது. அவர்கள் நோயாளிகளை எதிர்கொள்ளும்போது அவர்கள் மீதான அவதூறுகள், தாக்குதல்கள் குறித்து சமூக ஊடகங்கள், பத்திரிகைகள் மூலம் வரும் செய்திகள், அதை அவர்கள் எதிர்கொள்ளும் விதம், கிடைக்கும் அனுபவங்கள் பெரும் உளவியல்ரீதியான பாதிப்பை ஏற்படுத்தியுள்ளன.

இந்த அவதூறுகள், தாக்குதல்களைச் சமாளிக்கும் விதத்தில், இந்தியாவில் உள்ள மருத்துவர்கள், செவிலியர்கள் ஆகியோர் தாங்கள் வசிக்கும் இடங்களை விட்டே வேறு நகரங்களுக்கு குடியேறும் நிலைக்குத் தள்ளப்பட்டனர். இதன் காரணமாக சுகாதாரப் பணியாளர்கள் மன அழுத்தம், பதற்றம், அச்ச உணர்வு, மனச்சோர்வு, தூக்கமின்மை போன்ற பிரச்சினைகளை எதிர்கொண்டனர்.

நிர்வாக ரீதியிலும், பணிபுரியும் இடத்திலும் திடீரென ஏற்பட்ட மாற்றங்களும், அதற்குத் தங்களை உட்படுத்திக் கொள்வதிலும் சுகாதாரப் பணியாளர்கள் பெரும் சிரமத்தை எதிர்கொண்டார்கள். சமூக விலகல், பிபிஇ ஆடை அணிதல், கூடுதல் ஷிப்ட்கள், நேரம் பணிபுரிதல் போன்றவற்றுக்கு அவர்கள் முன்கூட்டியே தயாராகவில்லை. நீண்டநேரம் பணியாற்றும் கலாச்சாரம் சுகாதாரப் பணியாளர்களுக்கு உடல்ரீதியான பிரச்சினைகளையும், தூக்கமின்மையையும் ஏற்படுத்தின.

கரோனா பணியில் இருக்கும்போது, தங்களின் அன்புக்குரியவர்களைப் பிரிந்திருத்தல், குடும்பத்தைப் பிரிந்து பணியாற்றுதல் போன்றவற்றால் குடும்பத்தைப் பராமரிக்க முடியாத நிலை சுகாதாரப் பணியாளர்களுக்கு ஏற்பட்டது. மேலும், தான் குடும்பத்தோடு சேர்ந்திருந்தால், பழகினால் குடும்பத்தாருக்கும் கரோனா தொற்று ஏற்பட்டுவிடும். தங்களுக்கும் தொற்று ஏற்படும் என்ற அச்சம் எப்போதுமே சுகாதாரப் பணியாளர்களுக்கு இருந்தது மனரீதியான உளைச்சலை அளித்தது''.

இவ்வாறு அந்த ஆய்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

SCROLL FOR NEXT