காங்கிரஸ் செய்தித்தொடர்பாளர் அஜய் மக்கான் | படம்: ஏஎன்ஐ. 
இந்தியா

ஐசிஎம்ஆர் புள்ளிவிவரத்தில் அரசியல் தலையீடு; கரோனா 2-வது அலையில் 68 லட்சம் பேர் உயிரிழப்பா?- காங்கிரஸ் குற்றச்சாட்டு

ஏஎன்ஐ

கரோனா 2-வது அலையில் உயிரிழந்தவர்கள் குறித்த எண்ணிக்கையைக் குறைத்துக் காட்டியுள்ளது மத்திய அரசு என்று காங்கிரஸ் கட்சி குற்றம் சாட்டியுள்ளது.

காங்கிரஸ் கட்சியின் மூத்த செய்தித் தொடர்பாளர் அஜய் மக்கான் கூறியதாவது:

“ஐசிஎம்ஆர் அமைப்பில் பணியாற்றிய மூத்த அறிவியல் வல்லுநர்கள் மற்றும் பிற அமைப்புகளில் பணியாற்றிய பல்வேறு வல்லுநர்கள், கரோனா மேலாண்மையில் பல்வேறு தீவிரமான முறைகேடுகள் நடந்துள்ளதாகத் தெரிவிக்கிறார்கள். ஐசிஎம்ஆர் அமைப்பின் மூலம் வழங்கப்பட்ட புள்ளிவிவரங்களை மறைத்துப் போலியான புள்ளிவிவரங்களை வெளியிட அரசியல் தலையீடு அதிகமாக இருந்ததாக அறிவியல் வல்லுநர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்

ஐசிஎம்ஆர் அமைப்பு வெளியிட்ட அறிக்கையில் நாட்டில் கரோனா 2-வது அலையில் 4 லட்சத்து 43 ஆயிர்தது 497 பேர் உயிரிழந்ததாகக் கூறப்படுவது தவறானது. உண்மையில் கரோனாவில் உயிரிழந்தவர்கள் எண்ணிக்கை 43 லட்சம் அல்லது அதிகபட்சமாக 68 லட்சமாக இருக்கலாம்.

ஐசிஎம்ஆர் அமைப்பில் பணியாற்றிய அறிவியல் வல்லுநர்கள், அவற்றோடு தொடர்புடைய இடங்களில் பணியாற்றிய அறிவியல் வல்லுநர்கள், அரசியல் தலையீடுகள், கட்டுப்பாடுகள் போன்றவை புள்ளிவிவரங்களை வெளியிடுவதில் அதிகம் இருந்தன என்று குற்றம் சாட்டுகின்றனர். இது அறிவியலுக்கு எதிரானது மட்டுமல்ல ஜனநாயகத்துக்கும் எதிரானது. லட்சக்கணக்கான மரணங்களைத் தடுப்பதற்கும் எதிரானது”.

இவ்வாறு அஜய் மக்கான் தெரிவித்துள்ளார்.

SCROLL FOR NEXT