குஜராத்தில் 24 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர்.
குஜராத் முதல்வராக இருந்த விஜய் ருபானி அண்மையில் தனது பதவியை ராஜினாமா செய்தார். இதைத் தொடர்ந்து பாஜக மூத்த தலைவர் பூபேந்திர படேல் மாநிலத்தின் புதிய முதல்வராக கடந்த 13-ம் தேதி பதவியேற்றுக் கொண்டார்.
அவரது அமைச்சரவையில் 24 அமைச்சர்கள் நேற்று பதவியேற்றுக் கொண்டனர். இதில் 10 பேர் கேபினட் அமைச்சர்கள், 14 பேர் இணை அமைச்சர்கள் ஆவர். புதிய அமைச்சர்களுக்கு ஆளுநர் ஆச்சார்ய தேவ் விரத் பதவிப் பிரமாணம் செய்து வைத்தார். முன்னாள் முதல்வர் விஜய் ருபானி அமைச்சரவையில் இடம்பெற்றிருந்த 22 பேருக்கு மீண்டும் வாய்ப்பு வழங்கப்படவில்லை. முன்னாள் துணை முதல்வர் நிதின் படேலும் அமைச்சரவையில் சேர்க்கப்படவில்லை. முதல்வர் பூபேந்திர படேல் தலைமையில் புதிய அமைச்சரவை கூட்டம் நேற்று நடைபெற்றது. இதில் புதிய அமைச்சர்களுக்கு இலாகாக்கள் ஒதுக்கீடு செய்யப்பட்டன. அமைச்சர் ராஜேந்திர திரிவேதி வருவாய், பேரிடர் மேலாண்மை, சட்டம்-நீதித் துறை அமைச்சராக நியமிக்கப்பட்டுள்ளார். முதல்வருக்கு அடுத்து 2-வது இடத்தை இவர் பெற்றுள்ளார். பூபேந்திர படேல் முதல்வராக பதவியேற்க எதிர்ப்பு தெரிவித்தவர்கள் அமைச்சரவையில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாக பாஜக வட்டாரங்கள் தெரிவித்துள்ளன. -பிடிஐ