இந்தியா

சு.சுவாமி வாகனம் மீது முட்டை, தக்காளி, மை, குப்பை வீச்சு

பிடிஐ

பாஜக மூத்த தலைவர்களுள் ஒருவரான சுப்பிரமணியன் சுவாமி வாகனத்தின் மீது முட்டை, தக்காளி, மை மற்றும் குப்பை வீசப்பட்டது.

உத்தரப்பிரதேச மாநிலம் கான்பூரில் உள்ள கல்லூரியில் சர்வதேச பயங்கரவாதம் குறித்த கருத்தரங்கில் கலந்து கொள்வதற்காக சென்றிருந்தார் சுப்பிரமணியன் சுவாமி.

இன்று (சனிக்கிழமை) காலை 11 மணியளவில் சர்கியூட் ஹவுஸில் இருந்து கல்லூரிக்கு புறப்பட்டார். அப்போது அவரது பாதுகாப்பு வாகனத்தை மறித்த காங்கிரஸ் கட்சியினர் வாகனத்தின் மீது முட்டை, தக்காளி, மை மற்றும் குப்பையை வீசினர்.

இதனையடுத்து அங்கு குழுமியிருந்தவர்கள் மீது போலீஸார் தடியடி நடத்தினர். இதில் சிலருக்கு லேசான காயம் ஏற்பட்டது.

வழக்கமாக பல்வேறு சம்பவங்கள் குறித்தும் ட்விட்டரில் கருத்து தெரிவிக்கும் பழக்கம் கொண்ட சுவாமி கான்பூர் சம்பவம் குறித்து நேரடியாக ஏதும் தெரிவிக்கவில்லை.

இருப்பினும், கான்பூர் சம்பவத்தில் காங்கிரஸ் கட்சியினரை விமர்சித்து ட்விட்டரில் பதிவான கருத்துகளை ரீட்வீட் செய்துள்ளார்.

SCROLL FOR NEXT