ஜவஹர்லால் நேரு பல்கலைக்கழக (ஜேஎன்யூ) மாணவர் சங்கத் தலைவர் கண்ணய்யா குமார் மீதான தேசவிரோத குற்றச்சாட்டு தொடர்பான டெல்லி போலீஸார் முதல்கட்ட விசாரணை மேற் கொண்டனர். இதன் அறிக்கையை டெல்லி காவல்துறை ஆணையருக்கு நேற்று முன்தினம் அனுப்பினர்.
இதில் கண்ணய்யா தேச விரோத முழக்கமிடவில்லை என ஜேஎன்யூ தலைமை பாதுகாப்பு அதிகாரியும், அவர் முழக்கமிட்டார் என மாணவர் சங்க இணைச் செயலாளர் உள்ளிட்ட சிலரும் கூறியுள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது.
கடந்த பிப்ரவரி 9-ம் தேதி நடந்த சம்பவம் தொடர்பாக பல் கலைக்கழகத்தை சேர்ந்த 14 பேர் சாட்சியம் அளித்துள்ளனர். இதன் அடிப்படையில் இந்த அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. சம்பவம் குறித்து பல்கலை.யின் தலைமை பாதுகாப்பு அதிகாரி நவீன் யாதவ் எழுத்துப்பூர்வமாக அறிக்கை அளித்துள்ளார். இதில் “பிப்ரவரி 9-ம் தேதி நிகழ்ச்சியை நடத்தியவர் களில் கண்ணய்யாவும் ஒருவர். அனுமதி மறுப்பை மீறி அங்கு 15 முதல் 20 மாணவர்கள் கூடியிருந் தனர். இதில் தேசவிரோத முழக்கம் எழுப்பப்பட்டபோது கண்ணய்யா வும் அங்கு இருந்தார். ஆனால் கண்ணய்யா முழக்கம் எழுப்ப வில்லை” என்று கூறியுள்ளார்.
இதே கருத்தை சம்பவ இடத்தில் பணியில் இருந்த பல்கலை.யின் பாதுகாப்பு ஆய்வாளர் சந்தீப் குமார், இவரது உதவியாளர்கள் சூரஜ் பிரகாஷ், ஹோஷியார் சிங், அமர்ஜித்குமார், பிரவீன் குமார் கவுரவ் பாலி, பகீரத் சிங் ஆகி யோரும் கூறியுள்ளனர். ஆனால் ஜேஎன்யூ மாணவர் சங்க இணைச் செயலாளர் சவுரவ் குமார் சர்மா, அங்கு கூடியிருந்த கண்ணய்யா உள்ளிட்ட சுமார் 20 பேரும் தேசவி ரோத முழக்கமிட்டதாக சாட்சியம் அளித்துள்ளார்.
நியூரோ சயின்ஸ் முனைவர் பட்ட ஆய்வு மாணவரான சவுரவ் குமார், பாஜகவின் மாணவர் அமைப்பான அகில பாரதிய வித்யார்த்தி பரிஷத்தை சேர்ந்தவர். சவுரவ் குமாரின் கருத்தை அங்கு இருந்ததாக கூறும் மேலும் 5 மாணவர்களும் போலீஸாரிடம் உறுதி செய்துள்ளனர்.
இவற்றை தொகுத்து தங்கள் அறிக்கையில் குறிப்பிட்டுள்ள டெல்லி போலீஸார், குறிப்பாக 8 மாணவர்கள் அனுமதி மறுப்பை மீறி ஏற்பாடு செய்த கூட்டத்தில் தேச விரோத முழக்கம் எழுப்பப்பட்ட தாகவும், இதுவே சட்டம் ஒழுங்கு சீர்குலையக் காரணம் என்றும் குறிப்பிட்டுள்ளனர்.
இந்த சம்பவத்தின்போது அப் பகுதி காவல்நிலைய போலீஸார் சிலர் அங்கு இருந்ததாகவும் அப்போது, ஒருதரப்பு தேசவிரோத முழக்கம் எழுப்பியதாகவும் மற்றொரு தரப்பு தேச ஆதரவு முழக்கம் எழுப்பியதாகவும் அறிக்கையில் தெரிவித்துள்ளனர். எனினும் இவ்விரு முழக்கங்களை முதலில் எழுப்பியவர் மற்றும் அதன் பின்னணியில் இருந்தவர்களின் பெயர்களை குறிப்பிடவில்லை. இங்கு 29 முழக்கங்கள் எழுப்பப்பட்டதாக போலீஸார் வரிசைப்படுத்தியுள்ளனர். இதில் ‘பாகிஸ்தான் வாழ்க’ எனும் முழக்கம் இடம்பெறவில்லை. ஆனால் இந்த முழக்கத்தை வசந்த்குன்ச் காவல் நிலைய போலீஸார் தங்கள் முதல் தகவல் அறிக்கையில் (எப்ஐஆர்) குறிப்பிட்டுள்ளனர். அத்துடன் ‘ஜீ நியூஸ்’ இந்தி சேனலின் வீடியோவையும் இணைந்துள்ளனர்.