உத்தரப் பிரதேசத்தில் ஆம் ஆத்மி ஆட்சியமைந்தால் ஒரு குடும்பத்துக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும் என்று அக்கட்சி வாக்குறுதியளித்துள்ளது.
உத்தரப் பிரதேச மாநில சட்டப்பேரவைக்கு அடுத்த ஆண்டு தேர்தல் நடைபெறுகிறது. இந்த தேர்தலை எதிர்கொள்ள கட்சிகள் இப்போதே தீவிரம் காட்ட தொடங்கிவிட்டன. ஆளும் பாஜகவை தோற்கடிக்க சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ், காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் திட்டமிட்டுள்ளன.
இந்த தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சியும் தனித்து போட்டியிடுகிறது. மேற்கு உ.பி.யில் அக்கட்சிக்கு வாக்கு வங்கியுள்ளது.
இந்தநிலையில் ஆம் ஆத்மி மூத்த தலைவரும் டெல்லி துணை முதல்வருமான மணீஷ் சிசோடியா உத்தரப்பிரதேச மாநில சட்டப்பேரவைத் தேர்தல் தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்து பேசினார். அப்போது அவர் பேசியதாவது:
உத்தரப் பிரதேசத்தில் இருண்ட சகாப்தத்தை முடிவுக்குக் கொண்டுவர 2022 சட்டப்பேரவைத் தேர்தலில் அரவிந்த் கேஜ்ரிவால் தலைமையிலான ஆம் ஆத்மி கட்சி ஆட்சிக்கு மக்கள் வாக்களிக்க வேண்டும்.
உத்தரப் பிரதேசத்தில் அடுத்த ஆண்டு நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மி ஆட்சி அமைந்தால் விவசாயிகளுக்கு இலவச மின்சாரம் வழங்கப்படும். பொது மக்களின் நிலுவையில் உள்ள மின்சாரக் கட்டணங்களை தள்ளுபடி செய்யப்படும் தடையில்லா மின்சாரம் வழங்கப்படும். ஒரு குடும்பத்துக்கு 300 யூனிட் மின்சாரம் இலவசமாக வழங்கப்படும்.
தலைநகர் டெல்லியை போலவே அண்டை மாநிலமான உத்தரப் பிரதேசத்தில் மின்சாரக் கட்டணங்கள் சீர் செய்யப்படும். எனவே உத்தரப் பிரதேச மக்கள் சட்டப்பேரவைத் தேர்தலில் ஆம் ஆத்மிக்கு வாக்களிக்க வேண்டும்.
இவ்வாறு அவர் கூறினார்.