தெலங்கானா மாநிலம், ஹைதராபாத்தில் 6 வயதுச் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்த நபர், ரயில்வே தண்டவாளத்தில் உடல் சிதறிய நிலையில் சடலமாக இன்று மீட்கப்பட்டார்.
ஹைதராபாத்தில் சயாத்பாத் பகுதியில் உள்ள சிங்கரேனி காலனியில் 6 வயதுச் சிறுமியைக் கடந்த 9-ம் தேதி முதல் காணவில்லை. அதன்பின் மறுநாள் அந்தச் சிறுமியின் உடல் பக்கத்து வீட்டில் இருந்து கண்டுபிடிக்கப்பட்டது. சிறுமி பலாத்காரம் செய்து கொல்லப்பட்டதற்குப் பின் பக்கத்து வீட்டுக்காரர் பல்லகொண்ட ராஜு தலைமறைவானார்.
குற்றம் சாட்டப்பட்டுள்ள பல்லகொண்ட ராஜுவைப் பிடிக்க ஹைதராபாத் போலீஸார் தனிப்படை அமைத்துத் தேடி வந்தனர், அவர் குறித்து தகவல் அளித்தால் ரூ.10 லட்சம் வெகுமதியும் அளிக்கப்படும் என போலீஸார் அறிவித்திருந்தனர். இந்நிலையில் ஜனாகான் மாவட்டத்தில் கான்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட பகுதியில் உள்ள ரயில்வே இருப்புப் பாதையில் உடல் சிதறிய நிலையில் சடலம் கிடப்பதாக போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் இன்று காலை தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து, போலீஸார் உடலைக் கைப்பற்றி, தேடப்பட்டு வந்த பல்லகொண்ட ராஜுவின் உடலில் இருக்கும் அடையாளங்களையும், உறவினர்களை வைத்தும் அடையாளம் கண்டதில் ரயில் தண்டவாளத்தில் கிடந்தது பல்லகொண்ட ராஜுவின் உடல் எனத் தெரியவந்தது.
இது தொடர்பாக தெலங்கானா காவல் டிஜிபி ட்விட்டரில் வெளியிட்ட தகவலில், “தயவுசெய்து கவனிக்கவும். ஹைதராபாத் சிங்கனேரி காலனியில் சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர், கான்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரயில்வே இருப்புப் பாதையில் சடலமாக மீட்கப்பட்டார். அவரின் உடலைக் கைப்பற்றி உடலின் அடையாளங்களை வைத்துச் சிறுமியை பலாத்காரம் செய்த வழக்கில் தேடப்பட்டு வந்தவர் என்பது உறுதி செய்யப்பட்டது” எனத் தெரிவித்தார்.
சிறுமியை பலாத்காரம் செய்து கொலை செய்துவிட்டு கடந்த புதன்கிழமை இரவு முதல் பல்லகொண்ட ராஜு தலைமறைவானார். அவரைப் பிடிக்க தனிப்படையும் அமைக்கப்பட்டது. இந்நிலையில் கான்பூர் காவல் நிலையத்துக்கு உட்பட்ட ரயில் இருப்புப் பாதையில் உடல் கிடப்பதாக காலை 9.30 மணிக்கு போலீஸாருக்கு அப்பகுதி மக்கள் தகவல் அளித்தனர். 30 வயது மதிக்கத்தக்க நபர் ரயிலில் விழுந்து தற்கொலை செய்திருக்கலாம் என்று போலீஸார் முதலில் கருதினர். ஆனால், தேடப்பட்டு வந்த நபரின் உடல் அடையாளங்கள், சடலத்தில் இருந்த அடையாளங்களை ஒப்பிட்டுப் பார்த்தபின் போலீஸார் முறைப்படி அறிவித்தனர்.
இதற்கிடையே, சிறுமி கொலை குறித்து தெலங்கானா தொழிலாளர் மற்றும் வேலைவாய்ப்புத்துறை அமைச்சர் மல்லா ரெட்டி அளித்த பேட்டியில், “சிறுமி பலாத்காரக் கொலை வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட குற்றவாளி சிக்கினால், அவரை என்கவுன்ட்டரில் கொல்ல வேண்டும்” எனத் தெரிவித்தது குறிப்பிடத்தக்கது.