இந்துக்களின் உணர்வுகளை அவமதித்த காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி மன்னிப்பு கோர வேண்டும் என்று பாஜக வலியுறுத்தியுள்ளது.
காங்கிரஸ் கட்சியின் அனைத்து இந்திய மகளிர் காங்கிரஸ் உருவாக்கப்பட்ட நாள் நேற்று கொண்டாடப்பட்டது. இதில் பங்கேற்ற ராகுல் காந்தி பேசுகையில், “ஆர்எஸ்எஸ், பாஜகவின் சித்தாந்தங்களில் இருந்து காங்கிரஸ் முற்றிலும் வேறுபட்டது. இந்த நாட்டை இரு சித்தாந்தங்கள்தான் ஆள்கின்றன.
ஆர்எஸ்எஸ், பாஜகவினர் என்ன மாதிரியான இந்துக்கள், இவர்கள் போலி இந்துக்கள். இந்து மதத்தைப் பயன்படுத்தி, மதத்துக்கு இடைத்தரகர் வேலை செய்கிறார்கள். இவர்கள் இந்துக்கள் அல்ல. பிரதமர் மோடி சீனாவைப் பார்த்து நடுங்குகிறார். யாரும் நமது நிலத்தை எடுக்கவில்லை என்று பேசுகிறார். ஆனால், நமது ஆயிரக்கணக்கான கி.மீ. நிலத்தை சீனா எடுத்துக்கொண்டது. மோடியின் வாழ்க்கை முழுவதும் பொய். அவர் உண்மையிலிருந்து விலகிவிட்டார். அங்கு உண்மைக்கான சக்தி இல்லை.
மகாத்மா காந்தி, காங்கிரஸ், சாவர்க்கர், நாதுராம் கோட்சே ஆகியோருக்கு இடையிலான சித்தாந்த வேறுபாட்டைப் புரிந்துகொள்வது அவசியம். பாஜக, ஆர்எஸ்எஸ்ஸைச் சேர்ந்தவர்கள் தாங்கள் இந்துக் கட்சி என்கிறார்கள். கடந்த 200 ஆண்டுகளாக இந்து மதத்தைச் சரியாகப் புரிந்து கொண்டிருந்தால், அதைப் பின்பற்றியிருந்தால், அவர் மகாத்மா காந்தி மட்டும்தான்.
இந்து மதத்தை நாங்களும் நம்புகிறோம். பாஜக -ஆர்எஸ்எஸ் அமைப்பினரும் நம்புகிறார்கள். மகாத்மா காந்தி இந்து மதத்தைப் புரிந்துகொண்டு தனது வாழ்நாள் முழுவதையும் கடைப்பிடித்து வாழ்ந்தார் என்றால், ஆர்எஸ்எஸ் சித்தாந்தம் ஏன் அவரது மார்பில் மூன்று தோட்டாக்களைச் செலுத்தியது.
இது தீபாவளி நேரம். கடவுள் லட்சுமி சிலையைப் பார்த்திருப்பீர்கள். அதை ஏன் வணங்குகிறீர்கள். சக்திக்கு உரியவர் லட்சுமி, லட்சுமி என்றால் இலக்கை அடையத் துணையாக இருப்பவர். துர்கா என்றால் என்ன, துர்கா என்றால் சக்தி, அதாவது கோட்டையிலிருந்து வருகிறது. இந்துக் கட்சி என அழைக்கும் பாஜகவினர், நாடு முழுவதும் துர்கா, லட்சுமியைத் தாக்கினார்கள். எங்கு சென்றாலும் லட்சுமியைக் கொல்கிறார்கள். சில இடங்களில் துர்கையைக் கொல்கிறார்கள்.”
இவ்வாறு ராகுல் காந்தி தெரிவித்தார்.
ராகுல் காந்தியின் இந்தப் பேச்சுக்கு பாஜக கடும் கண்டனம் தெரிவித்து மன்னிப்பு கோர வேண்டும் என வலியுறுத்தியுள்ளது. பாஜக செய்தித் தொடர்பாளர் சம்பித் பத்ரா நிருபர்களுக்கு அளித்த பேட்டியில், “கடவுளை அரசியலுக்குள் இழுத்து, இந்துக் கடவுள்கள் குறித்து ராகுல் காந்தி முறையற்ற வார்த்தைகளைப் பேசியது தவறானது. மத அரசியல் செய்கிறார் ராகுல் காந்தி. இந்துக்களின் உணர்வுகளைப் புண்படுத்தும் வகையில்தான் ராகுல் காந்தி பேசி வருவதைக் கவனித்து வருகிறோம்.
ஆயிரக்கணக்கான மக்களின் நம்பிக்கைகளாக கடவுள் லட்சுமியும், துர்க்கையும் சரஸ்வதியும் உள்ளனர். இதுபோன்ற வார்த்தைகளை ராகுல் காந்தி பயன்படுத்தியிருக்கக் கூடாது. இந்து மதத்தின் மீது ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் ஏன் விரோதமாக இருக்கிறார்கள் என்பது வியப்பாக இருக்கிறது.
கடவுள் ராமர் மீதும் இதேபோன்ற நம்பிக்கையற்றுதான் காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இந்து தீவிரவாதம் என்ற வார்த்தையை இதே காங்கிரஸ் கட்சிதான் பேசியது. நாங்கள் மதத்துக்கான இடைத்தரகர்கள் அல்ல. அனைவருக்குமான வளர்ச்சி, முழுமையான வளர்ச்சியில் நம்பிக்கை கொள்கிறோம். இதுபோன்ற புண்படுத்தும் அரசியலில் ராகுல் காந்தியும், காங்கிரஸ் கட்சியும் ஈடுபடக் கூடாது. ராகுல் காந்தி பேசியதற்கு மன்னிப்பு கோர வேண்டும்''.
இவ்வாறு சம்பித் பத்ரா தெரிவித்தார்.