வங்கிக் கணக்கில் தவறுதலாக டெபாசிட் செய்யப்பட்ட ரூ.5 லட்சம், பிரதமர் மோடியால் டெபாசிட் செய்யப்பட்டது என்று கூறி பணத்தைத் தரமறுத்த பிஹார் இளைஞரை போலீஸார் கைது செய்தனர்.
2014-ம் ஆண்டு மக்களவைத் தேர்தலின்போது, வெளிநாடுகளில் இந்தியர்கள் பதுக்கி வைக்கப்பட்டிருக்கும் கறுப்புப் பணத்தை மீட்டால் ஒவ்வொருவர் வங்கிக் கணக்கில் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்யமுடியும் என்று பிரதமர் மோடி தேர்தல் பிரச்சாரத்தில் தெரிவித்ததாகக் கூறப்பட்டது. இந்நிலையில், தன் வங்கிக் கணக்குக்கு டெபாசிட் செய்யப்பட்ட ரூ.5 லட்சத்தை மோடிதான் கொடுத்தார் என்று நம்பிய பிஹார் இளைஞர் அந்தப் பணத்தைத் தரமறுத்துவிட்டார்.
ககாரியா மாவட்டத்தில் உள்ள மான்ஸி போலீஸ் நிலையத்துக்கு உட்பட்டது பக்தியார்பூர் கிராமம். இந்த கிராமத்தைச் சேர்ந்தவர் ரஞ்சித் தாஸ். இவரின் வங்கிக் கணக்கில் கடந்த மார்ச் மாதம் ரூ.5 லட்சம் தவறுதலாக ககாரியா கிராம வங்கி சார்பில் டெபாசிட் செய்யப்பட்டது.
கிராம வங்கி சார்பில் தவறு நடந்துவிட்டதை உணர்ந்து ரஞ்சித் தாஸுக்குப் பல முறை வங்கி சார்பில் நோட்டீஸ் அனுப்பி பணத்தைத் திருப்பித் தருமாறு கோரப்பட்டது. ஆனால், அந்த நோட்டீஸைக் கண்டுகொள்ளாத ரஞ்சித் தாஸ் அந்தப் பணத்தைத் தாராளமாகச் செலவிட்டார்.
இதையடுத்து, கிராம வங்கி சார்பில் மான்ஸி போலீஸ் நிலையத்தில் புகார் அளிக்கப்பட்டது. இதையடுத்து போலீஸார் நடத்திய விசாரணையில் ரஞ்சித் தாஸ் வங்கிக் கணக்கில் பணம் டெபாசிட் செய்யப்பட்டது உண்மையானதையடுத்து, அவரைக் கைது செய்தனர்.
இதுகுறித்து மான்ஸி போலீஸ் நிலையத் தலைமை அதிகாரி தீபக் குமார் கூறுகையில், “நாங்கள் ரஞ்சித் தாஸிடம் விசாரணை நடத்தினோம். அந்த விசாரணையில் அவரின் வங்கிக் கணக்கில் மார்ச் மாதம் ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டதும் மகிழ்ச்சி அடைந்ததாகத் தெரிவித்தார்.
பிரதமர் மோடி ஒவ்வொருவரின் வங்கிக் கணக்கிலும் ரூ.15 லட்சம் டெபாசிட் செய்வதாக பிரதமர் மோடி தெரிவித்திருந்தாரே அந்தத் தொகையில் முதல் தவணையாக ரூ.5 லட்சம் டெபாசிட் செய்யப்பட்டிருப்பதாக நினைத்தேன். அதனால் பணத்தைச் செலவிட்டேன் என விசாரணையில் தெரிவித்தார். ரஞ்சித் தாஸைக் கைது செய்து தொடர்ந்து விசாரணை நடத்தி வருகிறோம்” எனத் தெரிவித்தார்.