தமிழில் நடிகர் அர்ஜுன் நடித்த முதல்வன் படத்தில் வருவது போல மேடையிலேயே 2 அதிகாரிகளை மத்தியபிரதேச முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் சஸ்பெண்ட் செய்துள்ளார்.
மத்தியபிரதேச மாநிலத்தில் பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனா திட்டத்தின் (பிஎம்ஏஒய்) கீழ் ஏழைகளுக்கு வீடு கட்டித் தரும் திட்டம்அமல்படுத்தப்பட்டு வருகிறது.
இந்நிலையில் அந்தத் திட்டத்தில் முறைகேடு நடப்பதாக முதல்வர் சவுகானின் கவனத்துக்குவந்தது. நேற்று ஜெய்ரான் நகரில் நடைபெற்ற நிகழ்ச்சியின்போது பிரதம மந்திரி ஆவாஸ் யோஜனாதிட்டத்தில் ஊழல் செய்த அதிகாரிகள் 4 பேரின் பெயர்களை கூறுமாறு அருகில் இருந்த அதிகாரிகளிடம், முதல்வர் சவுகான் கேட்டார்.
அப்போது அந்த அதிகாரிகளில் 2 பேரின் பெயரை மேடையிலேயே அறிவித்த அவர், அவர்களை சஸ்பெண்ட் செய்தும் உத்தரவு பிறப்பித்தார்.
நிகழ்ச்சியில் முதல்வர் பேசும்போது, "இந்தத் திட்டத்தில் முதன்மை நகராட்சி அதிகாரி(சிஎம்ஓ) உமா சங்கர், சப்-இன்ஜினீயர் அபிஷேக் ராவத் ஆகியோர் ஊழல் செய்துள்ளதாகத் தெரியவந்துள்ளது. அவர்களை நான் சஸ்பெண்ட் செய்யட்டுமா?" என்று கூட்டத்தினரை நோக்கி கேட்டார். அதற்கு கூட்டத்தினரும் ஆம் என்று பதிலளித்தனர்.
இதையடுத்து அந்த அதிகாரிகளை மேடையிலேயே சஸ்பெண்ட் செய்து உத்தரவு பிறப்பித்தார் முதல்வர்.
மேலும் அவர்கள் மீது பொருளாதார குற்றப்பிரிவின் கீழ் வழக்குதொடர்ந்து விசாரிக்குமாறு அவர் அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.
தமிழில் நடிகர் அர்ஜுன் நடித்துவெளிவந்த முதல்வன் படத்தில்,தவறு செய்த அதிகாரிகளை உடனுக்குடன் சம்பவ இடத்திலேயே முதல்வர் தண்டிப்பார். அதைப் போலவே முதல்வர் சிவராஜ் சிங் சவுகான், மேடையிலேயே அதிகாரிகளை தண்டித்தது பொதுமக்களிடம் பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.