இந்தியா

சுரங்க தொழிலாளர்களுக்கு கிடைத்த ரூ.40 லட்சம் மதிப்பிலான வைரங்கள்

செய்திப்பிரிவு

மத்தியபிரதேச மாநிலம் பன்னா மாவட்டத்தில் ஏராளமான சிறிய ரக வைரச் சுரங்கங்கள் உள்ளன. இவற்றை தனியார் நிறுவனத்தார் குத்தகைக்கு எடுத்து நடத்தி வருகின்றனர்.

இந்நிலையில், பன்னா மாவட்டத்தைச் சேர்ந்த ரத்தன்லால் பிரஜாபாதி உள்ளிட்ட 4 பேர் ஹிராபூர் தபாரியான் பகுதியில் சிறிய ரக வைர சுரங்கத்தை எடுத்து நடத்தி வருகின்றனர். அண்மையில் அவர்களுக்கு 8.22 கேரட் மதிப்புள்ள வைரங்கள் கிடைத்தன. அவற்றை ரத்தன்லால் அரசிடம் ஒப்படைத்துள்ளார். வைரத்தை மதிப்பிட்ட பின்னர் திரும்ப வழங்கியுள்ளது அரசு. இந்தவைரங்கள் ஏலத்தில் விடும்போது அவை ரூ.40 லட்சம் வரை விலைபோகும் என்று தெரியவந்துள்ளது.

இதுகுறித்து பன்னா மாவட்ட ஆட்சியர் சஞ்சய்குமார் மிஸ்ரா கூறும்போது, “ஏலத்தில் போகும் தொகையில் அரசின் வரிகள் மற்றும் பங்கை எடுத்துக் கொண்டு மீதமுள்ள தொகையை சுரங்கத்தை நடத்தும் தொழிலாளர்களுக்கே வழங்க உள்ளோம்” என்றார்.

ரத்தன்லால் கூறும்போது, “நான்,நண்பர்கள் ரகுவீர் பிரஜாபாதி உள்ளிட்டோர் கடந்த 15 ஆண்டுகளாக இங்கு சுரங்கத்தைத் தோண்டி வருகிறோம். இதுவரை வைரம் கிடைத்ததில்லை. தற்போதுதான் கிடைத்துள்ளது. 15 ஆண்டுகளுக்கு பின்னர்எங்களுக்கு அதிர்ஷ்ட தேவதை கண் திறந்துள்ளாள்” என்றார்.

SCROLL FOR NEXT