இந்தியா

நிலுவை தொகை செலுத்த டெலிகாம் நிறுவனங்களுக்கு அவகாசம்; பேட்டரி வாகன உற்பத்தியை ஊக்குவிக்க ரூ.26,000 கோடி: மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

செய்திப்பிரிவு

பேட்டரி உள்ளிட்ட சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாகன உற்பத்தியை ஊக்குவிக் கும் விதமாக ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக் கீடு செய்யவும், நிதி நெருக்கடியில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த 4 ஆண்டுகள் அவகாசம் வழங்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.

டெல்லியில் பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் மத்திய அமைச்சரவை கூட்டம் நேற்று நடந்தது. இதில் இரு முக்கிய திட்டங்களுக்கு ஒப்புதல் அளிக்கப்பட்டது. இதன்படி, சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில் லாத வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக ரூ.26 ஆயிரம் கோடி ஒதுக்கப்படு கிறது. பேட்டரியில் இயங்கும் வாகனங்கள் மற்றும் ஹைட்ரஜன் எரிபொருளில் இயங் கும் வாகனங்கள் உற்பத்திக்கு இந்த சலுகை அளிக்கப்படும். இந்த சலுகை மூலம் 7.5 லட்சம் பேருக்கு ஆட்டோமொபைல் துறையில் வேலைவாய்ப்பு கிடைக்கும் என அரசு தெரிவித்துள்ளது.

கரோனா ஊரடங்கு நடவடிக்கைகளால் பெரும்பாலான தொழில்கள் முடங்கின. இதை ஊக்குவிக்கும் நடவடிக்கையாக உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு சலுகைகளை அரசு அளித்து வருகிறது. இதன்படி, கடந்த ஆண்டு ஆட்டோமொபைல் மற்றும் உதிரிபாக நிறுவனங்களுக்கு சலுகை அளிக்கும் விதமாக ரூ.57,043 கோடியை மத்திய அரசு ஒதுக்கீடு செய்தது. இந்த ஆண்டு சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத வாகன உற்பத்தியை ஊக்குவிக்கும் விதமாக ரூ.25,938 கோடி ஒதுக்கப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதன்மூலம் அரசின் பிஎல்ஐ திட்டத்தின்கீழ் மின்சார பவர் ஸ்டீரிங் சிஸ்டம் உள்ளிட்ட உதிரி பாகங்களை தயாரிக்கும் நிறுவனங்கள் பயன்பெறும் என தெரிவித்துள்ளது. 2021-22 நிதி ஆண்டில் உற்பத்தியுடன் இணைந்த ஊக்குவிப்பு சலுகைக்காக பட்ஜெட்டில் 13 துறைகளுக்கு ஒதுக்கப் பட்ட தொகை ரூ.1.97 லட்சம் கோடி என மதிப்பிடப்பட்டுள்ளது.

டெலிகாம் நிறுவனங்கள்

இதேபோல் நிதி நெருக்கடியில் இருக்கும் டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய நிலுவைத் தொகையை செலுத்த 4 ஆண்டுகள் அவ காசம் வழங்கும் திட்டத்துக்கும் மத்திய அமைச்சரவை அனுமதி அளித்துள்ளது.

இந்திய டெலிகாம் நிறுவனங்கள் அரசுக்கு செலுத்த வேண்டிய ஏஜிஆர் கட்டணம் மற்றும் அலைக்கற்றை கட்டணம் போன்றவற்றின் நிலுவைத் தொகையை உடனே செலுத்துமாறு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது. இந்த உத்தரவால் நிறுவனங்கள் திவால் ஆகும் நிலை ஏற்பட்டது. வோடபோன் ஐடியா, ஏர்டெல் மற்றும் ஜியோ நிறுவனங்களில் வோடபோன் ஐடியா மட்டுமே ரூ.50,399.63 கோடி நிலுவை வைத்துள்ளது. இந்த தொகையை செலுத்தும் கட்டாயம் ஏற்பட்டால் நிறுவனம் திவால் ஆகும்.

இத்தகைய சூழலில் இந்த நிலுவைத் தொகையை 10 ஆண்டுகளுக்குள் செலுத்திவிட வேண்டும் என உச்ச நீதிமன்றம் சலுகை தந்தது. அதேநேரத்தில் வோடபோன் ஐடியா நிறுவனத்துக்கு காலஅவகாசம் வழங்குவதற்காக வங்கி தரப்பில் அரசிடம் அறிவுறுத்தப்பட்டது. இதையடுத்து டெலிகாம் நிறுவனங்களு க்கு 4 ஆண்டுகளுக்கு நிலுவைத் தொகை செலுத்துவதில் இருந்து அவ காசம் அளிக்க அரசு தயாரானது. அத்துடன் கணிசமான பங்குகளை அரசு வாங்குவதற்கான முடிவும் எடுக்கப் பட்டது.

இந்த திட்டம் நாடாளுமன்ற அவையில் ஒப்புதலுக்காக முன்வைக்கப்பட்டது. தற்போது மத்திய அமைச்சரவையும் இந்த திட்டத்துக்கு ஒப்புதல் அளித்துள்ளது. எனவே, அடுத்த 4 ஆண்டுகளுக்கு டெலிகாம் நிறுவனங்கள் எந்த தொகையும் செலுத்த தேவையில்லை.

முன்னதாக இந்த விவகாரம் தொடர் பாக ஏர்டெல் நிறுவன தலைவர் சுனில் பார்தி மிட்டல் கூறும்போது, ‘‘துறையின் வருவாயில் 35 சதவீதம் வரி மற்றும் கட்டணங்களுக்கான போய்விடு கிறது. டெலிகாம் நிறுவனங்கள் ஏஜிஆர், அலைக்கற்றை கட்டணங்களை செலுத்த முடியாமல் கடனாளிகளாகின்றன. இந்த சிக்கல்களில் இருந்து நிறுவனங்கள் வெளி வர நுகர்வு விலையை உயர்த்துவதும், அரசு வரியை குறைப்பதும் அவசியம்’’ என்றார்.

SCROLL FOR NEXT