காங்கிரஸ் தலைமையிலான ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் செயல்பட்டு வந்த மத்திய அமைச்சர்கள் குழு, அதிகாரமளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழு ஆகியவற்றை கலைத்து பிரதமர் நரேந்திர மோடி சனிக்கிழமை உத்தரவிட்டார்
அமைச்சர்கள் விரைந்து முடிவு எடுக்கவும், பொறுப்புணர்வை அதிகரிக்கவும் இக் குழுக்கள் கலைக்கப்பட்டுள்ளன.
21 மத்திய அமைச்சர்கள் குழுக்களும், 9 அதிகார மளிக்கப்பட்ட அமைச்சர்கள் குழுக்களும் இதுவரை செயல்பட்டு வந்தன. அரசின் பல்வேறு நடவடிக்கைகளில் முக்கிய முடிவுகள் அமைச்சரவைக் குழுவுக்கு வரும் முன்பு அவற்றை இந்த அமைச்சர்கள் குழு பரிசீலித்து வந்தன.
இக்குழுக்கள் கலைக்கப்பட்டது தொடர்பாக பிரதமர் அலுவலகம் சார்பில் செய்திக் குறிப்பு வெளியிடப்பட்டுள்ளது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:
மத்திய அமைச்சகங்களுக்கும், துறைகளுக்கும் கூடுதல் அதிகாரம் அளிக்கும் வகையில் 21 அமைச்சர்கள் குழுவையும், 9 அதிகாரமளிக்கப்பட்ட அமைச் சர்கள் குழுக்களையும் கலைக்க பிரதமர் நரேந்திர மோடி உத்தர விட்டுள்ளார்.
விரைவான முடிவு
இதன் மூலம் முக்கிய முடிவுகள் விரைவில் எடுக்கப்படுவதோடு, சம்பந்தப்பட்ட அமைச்சகங் களுக்கு கூடுதல் பொறுப்புகளும் வழங்கப்படும். அமைச்சர்கள் குழுக்களிடம் நிலுவையில் உள்ள விவகாரங்கள் மீது இனி அமைச்சகமே முடிவு எடுக்கும்.
அமைச்சகங்கள் முடிவு எடுப்பதில் சிக்கல் ஏற்பட்டால் தீர்வு காண அமைச்சரவைச் செயலரும், பிரதமர் அலுவலகமும் துணைக்கு வருவார்கள்.
முக்கிய முடிவுகள் எடுப்பதில் தேவையற்ற காலதாமதம் ஏற்படுவதைத் தடுக்கும் வகையில் பிரதமர் இந்த நடவடிக்கையை மேற்கொண்டுள்ளார்.
இவ்வாறு அந்த அறிக்கை யில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இந்த அமைச்சர்கள் குழுவை அமைக்கும் யோசனை வாஜ்பாய் தலைமையிலான தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசில் முதன்முதலில் முன்வைக்கப் பட்டு பின்னர் நடைமுறைப்படுத் தப்பட்டது. அடுத்து அமைந்த மன்மோகன் சிங் தலைமையிலான காங்கிரஸ் கூட்டணி அரசிலும் மேலும் பல அமைச்சரவைக் குழுக்கள் அமைக்கப்பட்டன.
அவசியமில்லை
அரசின் முக்கிய முடிவுகள் தொடர்பாக கூட்டணிக் கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே இந்த அமைச்சர்கள் குழுக்கள் அமைக்கப்பட்டன. ஏனெனில் வாஜ்பாய் அரசும், மன்மோகன் சிங் அரசும் கூட்டணிக் கட்சிகளை நம்பி இருந்தன. இப்போது மக்களவையில் பாஜக தலைமையில் கூட்டணி ஆட்சி அமைந்தாலும் அந்த கட்சிக்கு தனிப் பெரும்பான்மை உள்ளது. எனவே கூட்டணி கட்சிகளுடன் கலந்து ஆலோசிக்க வேண்டிய அவசியமில்லை. கடந்த ஆட்சியில் ப.சிதம்பரம், ஏ.கே.அந்தோனி, சரத் பவார் ஆகியோரே பெரும்பாலான அமைச்சரவைக் குழுக்களுக்கு தலைமை வகித்தனர்.