உலக நாடுகளுக்கு பெரும் அச்சறுத்தலாக இருக்கும் என்று உலக சுகாதார அமைப்பால் அறிவிக்கப்பட்ட மியூ, சி.1.2. வகை உருமாறிய கரோனா வைரஸ் இந்தியாவில் கண்டுபிடிக்கப்படவில்லை என்று இந்திய சார்ஸ் வைரஸ் மரபணு கூட்டமைப்பு(ஐஎன்எஸ்ஏசிஓஜி) தெரிவித்துள்ளது.
ஐஎன்எஸ்ஏசிஓஜி என்பது கரோனா வைரஸ் குறித்தும், அதன் உருமாற்றம் குறித்தும் ஆய்வு செய்யும் ஆய்வுக்கூடங்களின் கூட்டமைப்பாகும். இந்த கூட்டமைப்பு வெளியிட்ட வாராந்திர ஆய்வறிக்கையில் இது தெரிவிக்கப்பட்டுள்ளது
உலக சுகாதார அமைப்பு கடந்த மாதம் 30-ம் தேதி கரோனா வைரஸில் பி.1.621, எனும் மியூ வைரஸ் எனும் உருமாறிய கரோனா வைரஸை சேர்த்தது. உருமாறிய கரோனா வைரஸில் மியூ வைரஸ், தற்போது உலகளவில் பரவலாக இருந்து வரும்டெல்டா வகை வைரஸைவிட வீரியமானது என்றும், தடுப்பூசி மூலம் உடலில் உண்டான நோய் எதிர்ப்புச் சக்தியை அழிக்கும் வல்லவமை கொண்டது என்று உலக சுகாதார அமைப்பு எச்சரித்தது.
இந்த வகை மியூ வைரஸ், கொலம்பியா நாட்டில் 39 சதவீதமும், ஈக்வெடாரில் 12 சதவீதமும் இருப்பதாகவும், தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது.
மியூ வைரஸ் தவிர்த்து சி.1.2. எனும் உருமாறிய வைரஸ் தென் ஆப்பிரிக்காவில் கண்டுபிடிக்கப்பட்டதாக உலக சுகாதார அமைப்பு தெரிவித்தது. ஆனால், இந்த வகை உருமாறிய கரோனா வைரஸ், உலகளவில் பரவவில்லை. தென் ஆப்பிரிக்காவில் மட்டும் கடந்த மே மாதத்தில் கண்டுபிடிக்கப்பட்டபோது 0.2 சதவீதம் இருந்த நிலையில் தற்போது 2 சதவீதம் ஜூலை மாதம் வரை மட்டுமே வளர்ந்துள்ளது. உலகளவில் 101 பேர் மட்டுேம பாதிக்கப்பட்டுள்ளனர், அதில் பெரும்பாலும் ஆப்பிரிக்காவில் உள்ளனர்.
இந்தியாவைப் பொறுத்தவை மியூ வகை வைரஸ், சி.1.2 வகை உருமாறிய கரோனா வைரஸ் இதுவரை கண்டறியப்படவில்லை. அதேசமயம், சர்வதேச பயணங்களில் இருந்து வரும் பயணிகளுக்கு கரோனா இருந்தால் அவர்கள் உடலில் இருந்து எடுக்கப்படும் மாதிரிகள் பரிசோதிக்கப்படுகின்றன. அவர்கள் தொடர்ந்து கண்காணிப்பட்டும், அவர்களின் மாதிரிகள் ஆய்வுக்கும் எடுக்கப்படுகின்றன. செப்டம்பர் முதல்வாரத்தில் 86,118 மாதிரிகள் வரிசைப்படுத்தப்பட்டு அதில் 53,294 மாதிரிகள் ஆய்வு செய்யப்பட்டன.
இவ்வாறு ஐஎன்எஸ்ஏசிஓஜி அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.