திருச்சானூரில் உள்ள பத்மாவதி தாயார் கோயிலில் வரும் 18-ம் தேதி முதல் 20-ம் தேதி வரை 3 நாட்களுக்கு வருடாந்திர பவித்ரோற்சவம் நடைபெற உள்ளது. கரோனா நிபந்தனைகள் அமலில் உள்ளதால் இம்முறையும் ஏகாந்தமாக பவித்ரோற்சவ விழாவினை நடத்த திருமலை திருப்பதி தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது. ஆனால் இவ்விழாவினில் பக்தர்கள் (இருவர்) ஆன்லைன் மூலம் ரூ. 1001 செலுத்தி டிக்கெட்டினை பெற இயலும். அதன் பின்னர் டிக்கெட் பெற்ற பக்தர்கள் 90 நாட்களுக்குள் ரூ. 100 சிறப்பு தரிசனம் வழியாக அந்த டிக்கெட் மூலம் தாயாரை தரிசிக்கும் வாய்ப்பினை தேவஸ்தானம் வழங்கியுள்ளது.
பவித்ரோற்சவத்தையொட்டி, ஆகம விதிகளின்படி, நேற்று கோயிலில் ஆழ்வார் திருமஞ்சன சேவைகள் நடைபெற்றன. இதனையொட்டி, நேற்று காலை தாயாருக்கு சுப்ரபாத சேவைகள் முடிந்த பின்னர், மஞ்சள், குங்குமம், சந்தனம், பன்னீர், பச்சை கற்பூரம் உட்பட பல்வேறு வாசனை திரவியங்களால் கோயிலின் சுவர்கள், சன்னதிகள், கற்ப கிரகம், விமான கோபுரம், பலிபீடம், கொடிக்கம்பம் உள்ளிட்டவை அனைத்தும் சுத்தம் செய்யப்பட்டது. அதன் பின்னர், தாயாரை தரிசிக்க பக்தர்கள் அனுமதிக்கப்பட்டனர்.
12 திரைகள் காணிக்கை: ஹைதராபாத்தை சேர்ந்த பக்தர் சாய்ராம் என்பவர் நேற்று தாயாருக்கு 12 திரைச்சீலைகளை காணிக்கையாக வழங்கினார். மாதம் ஒன்று வீதம் 12 மாதங்களுக்கு 12 சீலைகளை அவர் காணிக்கையாக வழங்கியதாக தெரிவித்தார்.