சில மாநிலங்களின் ஆளுநர்களுக்குப் பிறகு தற்போது தேசியப் பேரிடர் மேலாண்மை ஆணையத்தின் துணைத் தலைவர் சசிதர் ரெட்டி மற்றும் அதன் 5 உறுப்பினர்கள் ராஜினாமா செய்துள்ளனர்.
ஐக்கிய முற்போக்கு கூட்டணி அரசால் நியமிக்கப்பட்ட மாநில ஆளுநர்களை ராஜினாமா செய்ய மத்திய அரசு நெருக்கடி அளித்ததைத் தொடர்ந்து, முந்தைய அரசால் நியமிக்கப்பட்ட தேசிய பேரிடர் மேலாண்மை வாரிய உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய அரசு வலியுறுத்தியுள்ளதாக தகவல்கள் தெரிவித்தன.
இப்போது அதன் துணைத் தலைவருடன் சேர்ந்து 5 உறுப்பினர்களும் ராஜினாமா செய்துள்ளனர். அதேபோல் மகளிருக்கான தேசிய ஆணையங்களின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்களையும் ராஜினாமா செய்ய மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.
மேலும் தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினருக்கான தேசிய ஆணையத்தின் தலைவர்கள் மற்றும் உறுப்பினர்கள், பண்பாட்டு உறவுகளுக்கான இந்தியக் கவுன்சில் தலைவர் ஆகியோரையும் ராஜினாமா செய்ய மத்திய அரசு கேட்டுக்கொண்டுள்ளதாக அதிகாரபூர்வமற்ற தகவல்கள் தெரிவிக்கின்றன.
ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் இருந்த இவர்களை ராஜினாமா செய்யக் கோரினார் மத்திய உள்துறைச் செயலர் அனில் கோஸ்வாமி.
தேசியப் பேரிடர் மேலாண்மை வாரியத்திற்கு பிரதமரே தலைவர். துணைத் தலைவர் பொறுப்பு மத்திய அமைச்சர் பொறுப்பிற்கு இணையானது. அதே போல் உறுப்பினர்கள் பொறுப்பு மத்திய இணை அமைச்சர் பொறுப்பிற்கு ஈடானது.