இந்தியா

இதுவரை 75 கோடி தடுப்பூசிகள்: உலக சுகாதார அமைப்பு இந்தியாவுக்கு பாராட்டு

செய்திப்பிரிவு

நாடு முழுவதும் இதுவரை 75.10கோடி தடுப்பூசிகள் பயனாளி களுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது.

இந்தியாவில் கடந்த ஜனவரி 16-ல் கரோனா தடுப்பூசி போடும் திட்டம் தொடங்கப்பட்டது. இந்த தடுப்பூசி இரு தவணைகளாக செலுத்தப்படுகிறது. முதல்கட்ட மாக சுகாதார ஊழியர்களுக்கும் முன்களப் பணியாளர்களுக்கும் தடுப்பூசி போடப்பட்டது. கடந்த மார்ச் மாதம் 60 வயதுக்கு மேற்பட்டோருக்கும் ஏப்ரலில் 45 வயதுக்கு மேற்பட்டோருக்கும் தடுப்பூசி செலுத்தப்பட்டது. கடந்த மே 1-ம் தேதி முதல்18 வயதுக்கு மேற்பட்ட அனைவருக்கும் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது.

இந்த சூழலில் மத்திய சுகாதாரத் துறை நேற்று வெளியிட்ட புள்ளி விவரத்தில், நாடு முழுவதும் இதுவரை 75.10 கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட் டுள்ளது.

இதுகுறித்து மத்திய சுகாதாரத் துறை அமைச்சர் மன்சுக் மாண்டவியா ட்விட்டரில் வெளியிட்ட பதிவில், ‘‘பிரதமர் மோடியின் அனைத்து தரப்பினருக்கும் வளர்ச்சி என்ற கொள்கையின்படி உலகின் மிகப்பெரிய கரோனா தடுப்பூசி திட்டம் ஓய்வின்றி தீவிரமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. தடுப்பூசி திட்டத்தில் புதிய பரிணாமங்களை தொட்டு வருகிறோம். இப்போது 75-வது சுதந்திர தினத்தை கொண்டாடி வருகிறோம். இந்த நேரத்தில் தடுப்பூசிகளின் எண்ணிக்கை 75 கோடியை தாண்டியுள்ளது’’ என்றார்.

உலக சுகாதார அமைப்பின் தென்கிழக்கு ஆசியாவின் பிராந்திய இயக்குநர் மருத்துவர் பூனம் கூறும்போது, "இந்தியாவில் கடந்த 13 நாட்களில் மட்டும் 10 கோடி தடுப்பூசிகள் பயனாளிகளுக்கு செலுத்தப்பட்டிருக்கிறது" என்று புகழாரம் சூட்டியுள்ளார்.

மத்திய அமைச்சர் அனுராக் தாக்குர் கூறும்போது, ‘‘மத்திய அரசும் மாநில அரசுகளும் இணைந்து தடுப்பூசி திட்டத்தில் சாதனை படைத்து வருகின்றன. இதுவரை 75 கோடி தடுப்பூசிகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த வெற்றிக்கு காரணமான சுகாதார ஊழியர்களை வாழ்த்துகிறேன்’’ என்று தெரிவித்துள்ளார். - பிடிஐ

SCROLL FOR NEXT