புதுடெல்லி: முன்னாள் குடியரசுத் தலைவர் கியானி ஜெயில் சிங்கின் பேரன் இந்தரஜித் சிங் நேற்று பாஜகவில் சேர்ந்தார்.
பஞ்சாப் மாநிலத்தைச் சேர்ந்த கியானி ஜெயில் சிங், முன்னாள் பிரதமர்கள் இந்திரா காந்தி மற்றும் ராஜீவ் காந்தி ஆட்சிக் காலத்தில் குடியரசுத் தலைவராக பதவி வகித்தவர். இவரது பேரன் இந்தரஜித் சிங் நேற்று டெல்லியில் பாஜக தலைமை அலுவலகத்தில் மத்திய அமைச்சர் ஹர்தீப் சிங் புரி முன்னிலையில், பாஜகவில் சேர்ந்தார். இந்தரஜித் சிங்குக்கு பாஜக உறுப்பினர் அட்டையை அமைச்சர் ஹர்தீப் சிங் புரி வழங்கினார். பாஜக பொதுச் செயலாளரும் பஞ்சாப் மாநில கட்சியின் பொறுப்பாளருமான துஷ்யந்த் கவுதம் உள்ளிட்டோர் இந்தரஜித் சிங்குக்கு வாழ்த்து தெரிவித்தனர். பஞ்சாப் மக்களின் மனதில் பாஜக சிறப்பான இடம் பிடித்திருப்பதை கட்சியில் இந்தரஜித் சிங் சேர்ந்தது காட்டுவதாக துஷ்யந்த் கவுதம் தெரிவித்தார்.
பின்னர், இந்தரஜித் சிங் அளித்த பேட்டியில், ‘‘கியானி ஜெயில் சிங்கை உரிய மரியாதையுடன் நடத்தவில்லை. நான் பாஜகவில் சேரவேண்டும் என்று ஜெயில் சிங் விரும்பினார். வாஜ்பாய், அத்வானி ஆகியோரிடம் என்னை அறிமுகம் செய்து வைத்தார். எனது தாத்தா ஜெயில்சிங்கின் விருப்பப்படியே பாஜகவில் சேர்ந்துள்ளேன். டெல்லி முதல்வராக மதன்லால் குரானா இருந்த காலத்தில் பாஜகவுக்கு பிரச்சாரம் செய்துள்ளேன்’’ என்றார்.
இந்தரஜித் சிங் சார்ந்துள்ள ராம்கரியா எனும் பிற்படுத்தப்பட்ட சீக்கிய சமூகத்தினர் பஞ்சாபின் தோபா, மஜ்ஹா பகுதிகளில் கணிசமாக உள்ளனர். அடுத்த ஆண்டு பஞ்சாபில் சட்டப்பேரவைத் தேர்தல் நடக்க உள்ள நிலையில், மாநில மக்களிடம் செல்வாக்கு பெற்றவராக விளங்கிய ஜெயில் சிங்கின் பேரன் பாஜகவில் சேர்ந்திருப்பது குறிப்பிடத்தக்கது.