டெல்லியில் மாணவர்கள் மீது போலீஸார் நடத்திய தாக்குதல் சம்பவம் குறித்து விசாரணை அறிக்கை தாக்கல் செய்யுமாறு துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் உத்தரவிட்டுள்ளார்.
ஹைதராபாத் மத்திய பல்கலைக்கழக மாணவர் ரோஹித் வெமுலாவின் மரணத்துக்கு நீதி கோரி டெல்லியில் கடந்த சனிக்கிழமை மாணவ-மாணவியர் போராட்டம் நடத்தினர். ஆர்.எஸ்.எஸ் அலுவலகம் அருகே நடந்த இந்த போராட்டத்தை கலைக்க முயன்ற போலீஸார், பெண்கள் என்றும் பாராமல் அவர்களது தலைமுடிகளை இழுத்து வேண்டுமென்றே தாக்கினர். இது தொடர்பான ‘வீடியோ’ காட்சிகள் சமீபத்தில் வெளியாகி நாடு முழுவதும் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
போலீஸாரின் இந்த அராஜக நடவடிக்கைக்கு சமூகத்தில் உள்ள பல்வேறு தரப்பினர் கடும் கண்டனம் தெரிவித்து வருகின்றனர். டெல்லி முதல்வர் அர்விந்த் கேஜ்ரிவாலும், ‘‘மாணவர்கள் மீது அடக்குமுறையை ஏவிவிடுவதற்காக பாஜகவும், ஆர்.எஸ்.எஸ் அமைப்பும் இணைந்து டெல்லி போலீஸை தனியார் ராணுவமாக பயன்படுத்தி வருகிறது’’ என கடுமையாக குற்றம்சாட்டினார்.
இதனால் இந்த விவகாரம் பூதாகரமாகி வருவதை அடுத்து, டெல்லி மாநகர காவல்துறை இணை ஆணையர் எஸ்.கே.கவுதமை நேற்று அழைத்து நடந்த சம்பவம் குறித்து துணை நிலை ஆளுநர் நஜீப் ஜங் விளக்கம் கேட்டார். மேலும் இது தொடர்பாக விசாரணை நடத்தி அறிக்கை சமர்பிக்குமாறு உத்தரவிட்டார்.
வலுக்கும் போராட்டம்
இதற்கிடையில் டெல்லியில் உள்ள பல்வேறு பல்கலைக்கழக மாணவர்கள் நேற்று டெல்லி போலீஸ் தலைமை அலுவலகத்தை முற்றுகையிட்டு கண்டனப் போராட்டம் நடத்தினர். அப்போது அராஜகமாக நடந்து கொண்ட போலீஸார் மீது உரிய நடவடிக்கை எடுக்கக் கோரி மாணவர்கள் முழக்கமிட்டனர். இது குறித்து மாணவர்கள் அமைப்பின் துணை தலைவர் ரஷீத் ஷோரா கூறும்போது, ‘‘எங்களது கோரிக்கைகளுக்கு மத்திய அரசு செவிசாய்க்க மறுக்கிறது. போலீஸார் வேண்டுமென்றே எங்கள் மீது தாக்குதல் தொடுக்கின்றனர். தொடர்ந்து அராஜகம் நீடித்தால் நாங்கள் எங்கே செல்வது? ரோஹித் வெமுலாவைப் போல தற்கொலை தான் செய்து கொள்ள வேண்டும்’’ என ஆவேசப்பட்டார்.
மேலும் போலீஸ் தலைமை அலுவலகம் அமைந்திருந்த பகுதி வழியாக வாகனங்கள் செல்வதற்கும் மாணவர்கள் அனுமதிக்காமல் மறியலில் ஈடுபட்டனர். இதனால் பல மணி நேரம் போக்குவரத்து ஸ்தம்பித்தது.