இந்த நாட்டின் அனைத்து தீவிரவாதத்தின் தாய் காங்கிரஸ் கட்சிதான். கடவுள் ராமர் மீது நம்பிக்கையுள்ளவர்களை அவமதித்ததும் அந்தக் கட்சிதான் என்று உ.பி. முதல்வர் யோகி ஆதித்யநாத் கடுமையாக விமர்சித்துள்ளார்.
குஷிநகர் மாவட்டத்தில் ரூ.400 கோடி மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டி, ரூ126 கோடி செலவில் சாந்த்கபீர் நகரில் கட்டப்பட்ட சிறைச்சாலையையும் நேற்று முதல்வர் ஆதித்யநாத் திறந்து வைத்தார். அதன்பின் நடந்த நிகழ்ச்சியில் ஆதித்யநாத் பேசியதாவது:
இந்த நாட்டின் அனைத்து தீவிரவாதத்தின் தாயாக காங்கிரஸ் கட்சி இருக்கிறது. இந்த தேசத்தை புண்படுத்தும் மக்களை நாம் பொறுத்துக்கொள்ளத் தேவையில்லை. நோய், ராமர்மீது பக்தியுள்ளவர்களை அவமதித்தல், மாபியாக்களுக்கு அடைக்கலம் ஆகியவற்றைத்தான் காங்கிரஸ் கட்சி கொடுத்துள்ளது.
ஆனால், பாஜக மக்களின் ரணங்களை ஆற்றுப்படுத்தியுள்ளது, கடவுள் ஸ்ரீ ராமருக்கு பிரமாண்ட கோயில் கட்டுவதற்கான வழியை பாஜக காட்டியுள்ளது. பாஜக இருந்தால், ஒவ்வொருவருக்கும் மரியாதை இருக்கும், நம்பிக்கையிருக்கும்.
நோய்களைத் தவிர்த்து, வேலையின்மை, மாபியா ராஜ்ஜியம், ஊழல் ஆகியவற்றை காங்கிரஸ் கட்சி வழங்கியுள்ளது. காங்கிரஸ், சமாஜ்வாதி, பகுஜன் சமாஜ் அரசுகள் இந்த மாநிலத்துக்கு எதை வழங்கியுள்ளன.
பிரதமர் மோடியின் அமைச்சரவையில் ஒரு குறிப்பிட்ட பிரிவினரை சமாதானப்படுத்தும் அரசியலுக்கும் இடமில்லை. கடந்த 2017-ம் ஆண்டுக்கு முன் மக்கள் ஒவ்வொருவராலும் ரேஷன் பொருட்கள் பெற முடிந்ததா. ஏழைகளின் ரேஷன் பொருட்களைதான் அப்போது இருந்த ஆட்சியாளர்கள் அபகரித்தனர்.
தலிபான்களுக்கு ஆதரவான, சாதிக்கு ஆதரவான, வாரிசு அரசியலில் நம்பிக்கையுளளவர்களை, ராமபக்தர்களை துப்பாக்கியால் சுட்டவர்களை இந்த மாநில மக்கள் பொறுத்துக்கொள்ளமாட்டார்கள். தேள் எங்கிருந்தாலும் அது கொட்டத்தான் செய்யும் என்பதை மறந்துவிடக்கூடாது.
பிரதமர் மோடி முத்தலாக் சட்டத்தை ரத்து செய்தார், ஆனால், சமாஜ்வாதிக் கட்சியின் அறிக்கையை நீங்கள் படித்தால் அவர்கள் தலிபான்களுக்கு ஆதரவானவர்கள் எனத் தெரியும். பாகிஸ்தான் தீவிரவாதிகளுக்கு ஆதரவானர்கள், இந்த தேசத்தில் எங்கும் மறைந்திருக்க முடியவில்லை. கடந்த 2012ம் ஆண்டு சமாஜ்வாதி அரசு தீவிரவாதிகள் மீதான வழக்குகளை வாபஸ் பெற்றது.
இந்த தேசம் முதன்முதலில் ஆங்கிலேயர்களாலும் அதன்பின் காங்கிரஸ் கட்சியாலும் கொள்ளையடிக்கப்பட்டது. கடவுள் ராமர் மீது நேருவுக்கு நம்பிக்கையில்லை. துறவிகள் மீது இந்திராகாந்தி துப்பாக்கியால் சுட உத்தரவிட்டார். ராமர் கோயில் இருப்பதை சோனியா வேண்டாம் என்கிறார்.
இவ்வாறு ஆதித்யநாத் தெரிவித்தார்.