இந்தியா

தேசிய லோக் அதாலத்தில் 15 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு: ரூ.2,281 கோடி இழப்பீடு வழங்கல்

செய்திப்பிரிவு

தேசிய அளவிலான லோக் அதாலத்தில் (மக்கள் நீதிமன்றம்)15 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. மேலும், சம்பந்தப்பட்டவர்களுக்கு ரூ.2,281 கோடி அளவுக்கு இழப்பீடு வழங்கப்பட்டது.

நாடு முழுவதும் நீதிமன்றங் களில் நிலுவையிலுள்ள வழக்கு களின் எண்ணிக்கையைக் குறைக்க தேசிய சட்டப் பணிகள் ஆணையம் சார்பில் தேசிய லோக் அதாலத் நடத்தப்படுகிறது.

இந்த ஆண்டு ஏற்கெனவே ஏப்ரல், ஜூலை மாதங்களில் இருமுறை தேசிய லோக் அதாலத் நடைபெற்றது. அப்போது ஒரே நாளில் 31 லட்சத்துக்கும் மேற்பட்ட வழக்குகளில் தீர்வு காணப்பட்டது. இந்நிலையில், மூன்றாவது முறையாக நேற்று முன்தினம் லோக் அதாலத் நடத்தப்பட்டது.

இதுதொடர்பாக தேசிய சட்டப் பணிகள் ஆணையம் (என்ஏஎல்எஸ்ஏ) வெளியிட்ட செய்திக்குறிப்பு:

தேசிய லோக் அதாலத் நேரடியாகவும் காணொலி வழியாகவும் நடத்தப்பட்டது. இதில் மாலை 4 மணி வரை 33,12,389 வழக்குகள் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டன. அவற்றில் 15,33,186 வழக்குகளுக்குத் தீா்வு காணப்பட்டு மொத்தம் ரூ.2,281 கோடி இழப்பீடாக சம்பந்தப்பட்ட தரப்பினருக்கு வழங்க உத்தரவிடப்பட்டது.

பெரும்பாலும் மோட்டார் வாகன விபத்து வழக்குகள், திருமண விவகாரங்கள், காசோலை மோசடி தொடர்பான மனுக்கள் மீது விசாரணை நடத்தப்பட்டது.

மகாராஷ்டிரா, ஒடிசா, கர்நாடகா, கோவா மாநிலங்களில் கரோனா தொற்று காரணமாக தேசிய லோக் அதாலத் நடைபெறவில்லை.

அடுத்த தேசிய லோக் அதாலத்வரும் டிசம்பரில் நடைபெறும். நாடு முழுவதும் 33 மாநிலங்கள், யூனியன் பிரதேசங்களில் நடைபெற்ற லோக் அதாலத் விசாரணையை, என்ஏஎல்எஸ்ஏ தலைவர் நீதிபதி லலித் மேற்பார் வையிட்டார். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. - பிடிஐ

SCROLL FOR NEXT