இந்தியா

பாராலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய வீடியோவை ட்விட்டரில் பகிர்ந்த பிரதமர் நரேந்திர மோடி

செய்திப்பிரிவு

பாராலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய வீடியோவை பிரதமர் நரேந்திர மோடி தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

டோக்கியாவில் சமீபத்தில் முடிவடைந்த பாராலிம்பிக்கில் இந்தியா 5 தங்கம், 8 வெள்ளி, 6 வெண்கலம் என 19 பதக்கங்கள் வென்று வரலாற்று சாதனை படைத்தது.மேலும் பதக்கபட்டியலில் 24வது இடம் பிடித்தும் வரலாறு படைத்திருந்தது. இந்நிலையில் பாராலிம்பிக்கில் பங்கேற்ற இந்திய விளையாட்டு வீரர்கள் மற்றும் அவர்களது பயிற்சியாளர்களுக்கு கடந்த 9-ம் தேதி தனது இல்லத்தில் பிரதமர் மோடி விருந்தளித்தார்.

அப்போது அவர் அனைத்து வீரர்களுடனும் இயல்பாக உரையாடினார். வீரர்கள், பிரதமருக்கு நினைவுப் பரிசுகள் வழங்கினர். மேலும் அனைத்து வீரர்களும் கையெழுத்திட்ட அங்கி ஒன்றும் பிரதமருக்கு வழங்கப்பட்டது. அதைப்பெற்றுக்கொண்ட பிரதமர் மோடி உற்சாகமாக கழுத்தில் அணிந்து கொண்டார். இந்நிலையில் பாராலிம்பிக் வீரர்களுடன் உரையாடிய வீடியோவை பிரதமர் மோடி நேற்று தனது ட்விட்டர் பக்கத்தில் பகிர்ந்தார்.

அதில், பல விளையாட்டு நிகழ்வுகளில் வரலாற்று சாதனைபடைத்த பாராலிம்பிக் நட்சத்திரங்களுக்கு பிரதமர் மோடி வாழ்த்து தெரிவித்திருந்தார். மேலும் ‘‘உங்களது கடின உழைப்பால் அனைவராலும் நன்கு அறியப்படக்கூடியவர்களாக நீங்கள் மாறி உள்ளீர்கள். நீங்கள்அனைவரும் மக்களை ஊக்குவிக்கலாம், பெரிய மாற்றங்களை கொண்டு வர உதவலாம். நான் எப்போதும் உங்களுடன் இருக்கிறேன்’’ எனவும் தெரிவித்துள்ளார்.

1984 முதல் கோடைகால பாராலிம்பிக்கில் இந்திய விளையாட்டு வீரர்கள் பங்கேற்று வந்தாலும், இந்த ஆண்டு நிகழ்வானது நாட்டிற்கு மிகவும் வெற்றிகரமான பாராலிம்பிக் பருவமாக நிரூபிக்கப்பட்டது. இந்தியவீரர்கள் மொத்தம் 19 பதக்கங்கள் வென்றிருந்தனர். டோக்கியோ போட்டிக்கு முன்னதாக இந்தியா, முந்தைய அனைத்து பாராலிம்பிக்போட்டிகளிலும் சேர்த்து 12 பதக்கங்களை மட்டுமே வென்றிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.

SCROLL FOR NEXT