வெளியுறவு அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் இரண்டு நாள் பயணமாக இன்று (வெள்ளிக்கிழமை) இலங்கை புறப்பட்டுச் சென்றார். தமிழக மீனவர் பிரச்சினை, வடக்கு மாகாணத்தில் உள்ள தமிழர்கள் உரிமைகள் பிரச்சினை ஆகிய விவகாரங்கள் குறித்து அவர் ஆலோசிப்பார் என எதிர்பார்க்கப்படுகிறது.
கொழும்புவில் இன்று மாலை இந்தியா - இலங்கை 9-வது இருதரப்பு கூட்டம் நடைபெறுகிறது. இக்கூட்டத்தில் பிராந்திய பிரச்சினைகள் குறித்து விவாதிக்கப்படுகிறது.
1992-ல் இலங்கை - இந்தியா கூட்டமைப்பு உருவாக்கப்பட்டது. கடைசியாக இந்த கூட்டமைப்பின் கூட்டம் 2013-ல் ஜனவரியில் நடைபெற்றது. அதன் பிறகு தற்போதுதான் இந்த கூட்டம் கொழும்புவில் நடைபெறுகிறது.
இந்த கூட்டம் குறித்து வெளியுறவு செய்தித் தொடர்பாளர் விகாஸ் ஸ்வரூப் கூறும்போது, "இந்திய - இலங்கை வெளியுறவு அமைச்சர்கள் சந்திப்பின்போது தமிழக மீனவர்கள் பிரச்சினை குறித்து நிச்சயம் ஆலோசிக்கப்படும்.
இந்திய - இலங்கை உறவில் மீனவர் பிரச்சினை மிகப் பெரிய நெருடலாக இருந்து வருகிறது. இரு நாட்டு மீனவர்களும் தொடர்ந்து இவ்விவகாரம் குறித்து பேசிவந்தாலும் இதுவரை எந்த ஒரு சுமுக முடிவும் எட்டப்படவில்லை. மீனவர்கள் பிரச்சினையில் நீண்ட கால தீர்வு எட்டப்பட வேண்டும் என்றே இந்தியா விரும்புகிறது" எனத் தெரிவித்திருந்தார்.
அதிபர் சிறிசேனா, பிரதமர் விக்கிரமசிங்கே, முன்னாள் அதிபர் சந்திரிகா குமாரதுங்கே ஆகியோரை ஸ்வராஜ் சந்தித்துப் பேசுகிறார்.
தொடந்து நாளை (சனிக்கிழமை) நடைபெறவுள்ள சங்கம் திருவிழாவில் ரைஸ் ஆஃப் டிஜிட்டல் இந்தியா ‘Rise of Digital India’ என்ற இந்தியாவின் கண்காட்சி அரங்கை திறந்து வைக்கிறார். இதில் இந்தியாவில் ஏற்பட்டுள்ள தொழில்நுட்ப புரட்சிகள் குறித்து விரிவாக எடுத்துரைக்கப்படுகிறது.