ஷீனா ராகுல் உறவை தாய் இந்திராணியும், பீட்டர் முகர்ஜியும் விரும்பவில்லை என நீதிமன்றத்தில் சிபிஐ தெரிவித்துள்ளது.
மும்பை இளம் பெண் ஷீனா போரா கொலை வழக்கில் அவரது தாய் இந்திராணி முகர்ஜி முக்கிய குற்றவாளியாக கைது செய்யப்பட்டுள்ளார். இவ்வழக்கில் இந்திராணியின் 3-வது கணவரும் தனியார் ‘டிவி’யின் முன்னாள் சிஇஓவுமான பீட்டர் முகர்ஜியையும் சிபிஐ அதிகாரிகள் கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணை யில், பல்வேறு திடுக்கிடும் தகவல் கள் வெளியாகி வருகின்றன. எனி னும் பீட்டர் முகர்ஜிக்கு இந்த கொலையில் தொடர்பு இல்லை என அவரது மகன் ராகுல் முகர்ஜி தொடர்ந்து கூறி வருகிறார்.
ஆனால், சிபிஐ நடத்திய விசா ரணையில் அவருக்கும் இந்த கொலையில் தொடர்பு இருப்பதற் கான ஆதாரங்கள் சிக்கியிருப்பதாக கூறப்படுகிறது. இந்நிலையில் பீட்டர் முகர்ஜி சார்பில் மும்பையில் உள்ள சிபிஐ சிறப்பு நீதிமன்றத்தில் ஜாமீன் கோரி மனு தாக்கல் செய் யப்பட்டது. இந்த மனு நேற்று சிபிஐ சிறப்பு நீதிபதி ஹெச்.எஸ்.மஹாஜன் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது. அப்போது சிபிஐ தரப்பில் ஆஜரான கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் அனில் சிங், ‘‘ராகுல், ஷீனா இருவரும் நெருங்கி பழகியதை பீட்டரும், இந்திராணியும் விரும்ப வில்லை. இதனால் ஷீனாவை படு கொலை செய்து சடலத்தை தனது கார் மூலம் ராய்கட் வனப்பகுதிக்கு எடுத்து சென்றபோது கூட, இந்திராணி தொலைபேசி மூலம் பீட்டருடன் பேசிக் கொண்டிருந்தார். எனவே இந்த கொலை குறித்து பீட்டருக்கு தெரியாது என்று உறுதி யாக கூறிவிட முடியாது.
மேலும் காணாமல் போன ஷீனாவை தேடி மகன் ராகுல் வீட்டுக்கு வந்ததாக வீட்டு பணி யாளர்கள் பீட்டரிடம் தெரிவித்துள் ளனர். அதற்கு அவர் ஷீனாவையும், ராகுலையும் இந்திராணி பிரித்து விட்டார். எனவே யாரும் கவலை கொள்ள வேண்டாம் என தெரிவித் துள்ளார். ஒரு குடும்பத்தில் நெருங்கி பழகிய ஷீனா திடீரென காணாமல் போனதும் அவரை தேட பீட்டர் முகர்ஜி முயற்சிக்கவில்லை. இதை வைத்து பார்க்கும்போது பீட்டருக்கு இந்த கொலை விவகாரம் நிச்சயம் தெரிந்திருக்கும் என தெரிய வருகிறது. எனவே அவருக்கு ஜாமீன் வழங்கக் கூடாது’’ என வாதாடினார்.