வெளிச்சந்தையிலிருந்து ரூ. 20 ஆயிரம் கோடியைத் திரட்ட ரயில்வே அமைச்சகம் முடிவு செய்துள்ளது. ரயில்வே துறையின் துணை நிறுவனங்களான ஐஆர்எப்சி மற்றும் ரயில் விகாஸ் நிகாம் லிமிடெட் மூலம் இத் தொகையைத் திரட்ட உத்தேசித் துள்ளதாக ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
2016-17-ம் நிதி ஆண்டுக்கான பட்ஜெட்டை மக்களவையில் நேற்று தாக்கல் செய்து அதன் சிறப்பம்சங்களை விவரித்த சுரேஷ் பிரபு, வரும் நிதி ஆண்டில் மூலதன செலவுகளைச் சமாளிக்க இத்தொகை திரட்டப்பட உள்ளதாக அவர் தெரிவித்தார். நடப்பு நிதி ஆண்டைக் காட்டிலும் ரயில்வே துறையின் செலவு 69 சதவீதம் அதிகரிக்கும் என்று திருத்திய மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
நடப்பு நிதி ஆண்டில் சந்தையிலிருந்து ரூ. 11,848 கோடி நிதியை ரயில்வே அமைச்சகம் திரட்டும் என திருத்திய மதிப்பீடு தெரிவிக்கிறது. முன்னர் இது ரூ. 17,655 கோடியாக இருந்தது.
வரும் நிதி ஆண்டில் கிடப்பில் உள்ள திட்டப் பணிகள் மற்றும் புதிய திட்டப் பணிகளை நிறை வேற்ற இந்திய ரயில்வே நிதி நிறுவனம் (ஐஆர்எப்சி) ரூ. 19,760 கோடியைத் திரட்ட உள்ளது. ஆர்விஎன்எல் நிறுவனம் ரூ. 240 கோடியைத் திரட்ட உள்ளது.
2015-16-ம் நிதி ஆண்டில் ஐஆர்எப்சி நிறுவனம் ரூ.11,591 கோடியையும், ஆர்விஎன்எல் ரூ. 255.09 கோடியையும் திரட்டியதாக திருத்தப்பட்ட மதிப்பீடுகள் தெரிவிக்கின்றன.
சாத்தியமான திட்டப் பணிகள் அதாவது வங்கிக் கடன் உத்தரவாதமாகக் கிடைக்கும் திட்டப் பணிகள் அனைத்தும் அடுத்த மூன்று முதல் நான்கு ஆண்டுகளுக்குள் நிறைவேற்றப்படும் என்று சுரேஷ் பிரபு தனது பட்ஜெட் உரையில் தெரிவித்தார்.
நிதி நிறுவனங்கள் மூலமாக நிதி திரட்டும் புதிய வழியை ரயில்வே அமைச்சகம் கண்டறிந்துள்ளது. இதன்படி எல்ஐசி நிறுவனம் ரூ. 1.5 லட்சம் கோடியை அடுத்த 5 ஆண்டுகளில் முதலீடு செய்யத் திட்டமிட்டுள்ளது. ரயில்வே திட்டங்களை நிறைவேற்ற பன்முக நிறுவனங்கள் மூலம் ஒரு நிதியத்தை ஏற்படுத்தவும் ஆலோசித்து வருவதாக சுரேஷ் பிரபு கூறினார்.
வரும் நிதி ஆண்டில் இதுபோன்ற பன்முக நிதி அமைப்புகள் மூலம் ரூ. 20,985 கோடியைத் திரட்ட ரயில்வே அமைச்சகம் உத்தேசித்துள்ளது.
திட்டப் பணிகளுக்கு கூடுதலாக செலவிட ரயில்வே அமைச்சகம் முன்வந்துள்ளது. மூலதன அதிகரிப்பு மூலம் சிறப்பான திட்டத்துடன் கூடிய ரயில்வே பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக நிதிச் செயலர் ரத்தன் பி வாட்டாள் கூறினார். மத்திய நிதி அமைச்சகம் நடப்பு நிதி ஆண்டில் ரயில்வே அமைச்சகத்துக்கு ஒதுக்கிய நிதி முழுவதையும் அந்த அமைச்சகம் முழுமையாகப் பயன்படுத்திக் கொண்டுள்ளது என்று வருவாய் துறைச் செயலாளர் ரத்தன் பி வாட்டாள் கூறினார்.
எல்ஐசி ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு
ரயில்வே துறையில் பல்வேறு வர்த்தக திட்டங்களில் ரூ.1.5 லட்சம் கோடி முதலீடு செய்ய ஆயுள் காப்பீ்ட்டு நிறுவனம் (எல்ஐசி) ஒப்புக் கொண்டுள்ளது என அமைச்சர் சுரேஷ் பிரபு தெரிவித்தார்.
இந்த முதலீடு ஐந்தாண்டு கால கட்டத்தில் மேற்கொள்ளப்படும். ரயில்வே பைனான்ஸ் கார்ப்பரேஷன்ஸ் உள்ளிட்ட ரயில்வே அமைப்புகள் மூலம் இந்த முதலீட்டை எல்ஐசி மேற்கொள்ளும். நவீனமயமாக்கும் திட்டத்தில் 5 ஆண்டுகளில் ரூ.8.5 லட்சம் கோடியை முதலீடு செய்ய ரயில்வே விரும்புகிறது.
2016-17-ம் நிதியாண்டில் நவீனப்படுத்தும் திட்டத்தில் ரூ.1.21 லட்சம் கோடி முதலீடு செய்யப்படும். இது கடந்த ஆண்டை விட 20 சதவீதம் அதிகம்.