ரயில் பயணிகளுக்கு அவர்கள் விரும்பும் உள்ளூர் உணவு வகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு ரயில்வே பட்ஜெட்டில் அறிவித்துள்ளார்.
இது குறித்து அவர் கூறியதாவது:
கட்டம் கட்டமாக இந்திய ரயில்வே உணவு வழங்குதல் சுற்றுலா கழகம் (ஐ.ஆர்.சி.டி.சி) உணவு வழங்கல் சேவையை நிர்வகிக்கும். உணவு தயாரித்தல், உணவு விநியோகம் என ஐ.ஆர்.சி.டி.சி உணவு வழங்கல் சேவையை பிரிக்கும்.
ரயில்களில் தற்போது கட்டாயச் சேவையாக உள்ள உணவு வகைகள், விருப்பப்படி என்ற அடிப்படையில் மாற்றும் சாத்தியக் கூறு குறித்து இந்திய ரயில்வே ஆராய்ந்து வருகிறது. பயணிகளுக்கு அவர்கள் விரும்பிய உள்ளூர் உணவு வகைகள் வழங்க நடவடிக்கை எடுக்கபடும்.
மின்னணு உணவுச் சேவைகள் 408 ஏ.1 மற்றும் ஏ பிரிவு ரயில் நிலையங்களுக்கு விரிவாக்கப்படும். ரயில்களில் புதிதாக, தூய்மையாக தயாரிக்கப்பட்ட உணவு வழங்குவதை உறுதி செய்ய ஐ.ஆர்.சி.டி.சி மூலம் செயல்படுத்தும் மேலும் 10 எந்திர மயமாக்கப்பட்ட, அதிநவீன சமையலறைகள் கூடுதலாக அமைக்கப்படும் ரயில் நிலையங்களில் தற்போதுள்ள ஒரு சேவைக்கான கடைகள் பல சேவைகளுக்கான கடைகளாக மாற்றி அமைக்கும் புதிய கொள்கை அறிமுகப்படுத்தப்படும்
உணவு வழங்கும் பிரிவுகளில் ஷெட்யுல்ட் வகுப்பினர், பழங்குடியினர், இதர பிற்படுத்தப்பட்ட வகுப்பினர், மகளிர், மாற்றுத் திறனாளிகள் ஆகியோருக்கு இட ஒதுக்கீடுகளை உறுதி செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளன.
ரயில் நிலையங்களில் வர்த்தக உரிமங்கள் வழங்குவதில் அந்த மாவட்டங்களில் வசிப்போருக்கு முன்னுரிமை வழங்படும். இந்த நடைமுறை மூலம் உள்ளூர்காரர்கள் உரிமை பெறுவதும் அதிகாரம் பெறுவதும் உறுதி செய்யப்படும்.
வாடிக்கையாளர்களுக்கு அவர்கள் விரும்பினால் தேநீரை மண் குவளைகளில் வழங்கும் சாத்தியக் கூறுகள் பற்றி இந்திய ரயில்வே ஆராய்ந்து வருகிறது.
இவ்வாறு சில அறிவிப்புகளை வெளியிட்டுள்ளார் மத்திய ரயில்வே அமைச்சர் சுரேஷ் பிரபு.