மும்பையில் இன்று மெட்ரோ ரயில் சேவைத் தொடங்கியது. மகாராஷ்டிர முதல்வர் பிரிதிவி ராஜ் சவான் கொடியசைத்துத் துவங்கி வைத்தார்.
மும்பையில் வெர்சோவா-அந்தேரி காட்கோபர் இடையே இந்த ரயில் சேவைத் தொடங்கப்பட்டுள்ளது.
இதனால் வெர்சோவா-அந்தேரி காட்கோபர் இடையேயான் பயண நேரம் 90 நிமிடங்களிலிருந்து 20 நிமிடங்களாகக் குறைந்துள்ளது. 11.4 கிமீ தூரத்தை சாலைப் போக்குவரத்தில் கடக்க 90 நிமிட நேரம் ஆகும்.
ஆனாலும் கட்டணங்கள் குறித்த சச்சரவுகள் இருக்கவே செய்கின்றன என்பதை ஒப்புக் கொண்ட முதல்வர் சவான், நீதிமன்றம் மூலம் அவை முடிவுக்கு வரும் என்றார்.
இந்த ரயில் சேவையை நடத்தும் மும்பை மெட்ரோ ஒன் தனியார் நிறுவனம் ஒருவழிப் பயணத்திற்குக் குறைந்த பட்ச கட்டணமாக ரூ.10-ஐயும், அதிகபட்சக் கட்டணமாக ரூ.40-ஐயும் நிர்ணயித்தது. ஆனால் மகாராஷ்டிர அரசு இந்தக் கட்டணத்தை ஏற்கவில்லை மாநில அரசு நிர்ணயிக்கும் கட்டணத்திலேயே ரயில்கள் இயக்கப்படவேண்டும் என்று வலியுறுத்தியது.
மும்பை மெட்ரோ ஒன் தனியார் நிறுவனம் அனில் அம்பானியின் ரிலையன்ஸ் இன்ஃப்ரா ஸ்ட்ரக்சர், வியோலியா போக்குவரத்து, மற்றும் மும்பை பெருநகர மண்டல வளர்ச்சி ஆணையம் ஆகியவற்றின் கூட்டு முயற்சியால் உருவான நிறுவனம் என்பது குறிப்பிடத்தகக்து.