கரோனா தொற்று பரவல் காரணமாக நாடுமுழுவதும் நீண்ட நாட்களாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பதால்,பள்ளி மாணவர்கள், குறிப்பாக கிராமப்புற மாணவர்களுக்கு பேரழிவான விளைவுகள் ஏற்பட்டுள்ளது என்று ஆய்வு தெரிவித்துள்ளது.
பள்ளி மாணவர்களுக்கான ஆன்-லைன் மற்றும் ஆஃப் லைன் கற்றல்(SCHOOL) என்ற அமைப்பு பொருளதார வல்லுநர் ஜீன் ட்ரெஸ் தலைமையில் 100 தன்னார்வலர்களைக் கொண்டு 15 மாநிலங்களில் அவசர ஆய்வு நடத்தியது.
“பள்ளிக் கல்விக்கான அவசர ஆய்வறிக்கை” என்ற தலைப்பில் ஆய்வறிக்கை வெளியிடப்பட்டது.
இதில் அசாம், பிஹார், டெல்லி, குஜராத், ஹரியானா, ஜார்கண்ட், கர்நாடகா, மத்தியப்பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா, பஞ்சாப், உ.பி. தமிழகம், மே.வங்கம் ஆகிய மாநிலங்களில் இருந்து, 1,362 பேர் ஆய்வில் பங்கேற்றனர். இந்த ஆய்வில் கூறியிருப்பதாவது:
ஆன்லைன் வகுப்புகள்
கரோனா பரவல் காரணமாக நீண்டகாலமாக பள்ளிகள் மூடப்பட்டு, ஆன்-லைன் மூலமே வகுப்புகள் மாணவர்கள் நடத்தப்படுகிறது. இதில் ஆன்-லைன் வகுப்புகள் கிராமப்புறங்களில் உள்ள 8 சதவீதம் மாணவர்கள் மட்டுமே பயன் அளிக்கின்றன, 37 சதவீதம் பேர் சேர்ந்து படிப்பதையே நிறுத்திவிட்டனர்.
ஆன்-லைன் மூலம் வகுப்புகள் மாணவர்களுக்கு சென்று சேரும் வீச்சு என்பது குறைவாக இருக்கிறது என்பது ஆய்வில் தெளிவாகிறது. ஆன்-லைன் மூலம் தொடர்ந்து வகுப்புகளை கவனிப்பது நகர்புறங்களில் 24 சதவீதமும் கிராமப்புறங்களில் வெறும் 8 சதவீதம் மட்டும்தான்.
கிராமப்புறங்களில் ஆய்வில் பங்கேற்ற பெரும்பாலானோர் வீடுகளில் மாணவர்கள் ஆன்லைன் வகுப்புகளில் படிக்க ஸ்மாட்போன் வசதி இல்லை.
ஸ்மார்ட்போன் வசதியில்லை
அதிலும் பட்டியலினப்பிரிவில் உள்ள குழந்தைகள், பழங்குடியினப் பிரிவைச் சேர்ந்த குழந்தைகள் பள்ளி மூடலால் மோசமாக பாதிக்கப்பட்டனர், ஆன்-லைன் வகுப்புகள் வெறும் 5 சதவீதம் மட்டுமே சென்று சேர்கிறது.
ஏழ்மையான, நடுத்தர வீடுகளில் பெரும்பாலும் ஸ்மார்ட் போன்கள் வேலைக்குச் செல்லும் பிரிவினரிடம் இருக்கிறது. மாணவர்களுக்கு ஆன் லைன் வகுப்புகள் நடக்கும்போது அவர்கள் வேலைக்குச் சென்றுவிடுவதால் வகுப்புகளை கேட்கமுடிவதில்லை.
ஆசிரியர்கள், மாணவர்கள் இடைவெளி
பள்ளிகள் தொடர்ந்து மூடப்பட்டு இருப்பதால் மாணவர்கள், ஆசிரியர்கள் இடையிலான உறவு மோசமாகப் பாதிக்கப்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள 51 சதவீதம் மாணவர்கள், கிராமப்புறங்களில் உள்ள 58 சதவீதம் மாணவர்கள் தங்களின் ஆசிரியர்களை நேரில் சந்தித்து எந்த சந்தேகத்துக்கு விளக்கம் அறிய முடியவில்லை என்கின்றனர்.
அதுமட்டுமல்லாமல் கரோனா காலத்தில் ஆசிரியர்கள் அனைவரும் தங்களுக்கு வசதியான இடங்களில் இருந்துதான் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலம் பாடம் நடத்த முடிகிறது, பள்ளிக்கு வர இயலவில்லை
சத்துணவு கிடைக்கவில்லை
நீண்டகாலம் பள்ளிகள் மூடலால் மாணவர்களுக்கு கிடைக்கும் சரிவிகித சத்துணவு கிடைப்பதில் பெரும் சிக்கல் ஏற்பட்டுள்ளது. பள்ளிகள் மூடப்பட்டதால் மதிய உணவு நிறுத்தப்பட்டுள்ளது. அரசுப் பள்ளிகளில் தங்கள் பயிலும் குழந்தைகள் 80 சதவீதம் பேர் நீண்டகாலமாக ஒரே மாதிரியான உணவை தொடர்ந்து சாப்பிடுகிறார்கள் இதனால் சரிவிகித உணவு கிடைக்கவில்லை.
பெற்றோர்கள் கருத்து என்ன?
பள்ளிகள் விரைவாக திறக்கப்பட வேண்டும் என பெற்றோர் மத்தியில் பெரிய ஆதங்கம் ஏற்பட்டுள்ளது. நகர்ப்புறங்களில் உள்ள 10 சதவீதம் பெற்றோர் மட்டுமே குழந்தைகளை பள்ளிக்கு அனுப்ப கரோனா காரணமாக அச்சப்படுகிறார்கள். ஆனால், 97 சதவீதம் பெற்றோர் பள்ளிகள் திறக்கப்பட வேண்டும் என்று விரும்புகிறார்கள். நீண்டகாலமாக பள்ளிகள் மூடப்பட்டு இருப்பது, மிகப்பெரிய பேரழிவுக்கே இட்டுச் செல்லும்.
மாணவர்கள் மனதில் ஏற்பட்டுள்ள பாதிப்புகளைச் சரி செய்ய நீண்டகாலமாகும். அதில் பள்ளிகளைத் திறப்பது என்பது முதல்படி, ஆனாலும் பள்ளிகளைத் திறப்பது தொடர்ந்து விவாதத்துக்குள்ளாகி வருகிறது. ஆனால் பல மாநிலங்களில் மாணவர்களுக்காக பள்ளிகளைத் தயார் செய்வதுகூட இன்னும் தொடங்கப்படவில்லை
இவ்வாறு ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.