திருப்பதியில் இன்று முதல் சோதனை அடிப்படையில் இலவசதரிசன டோக்கன்கள் வழங்கப்பட உள்ளன.
கரோனா தடுப்பு நடவடிக்கை காரணமாக திருப்பதி ஏழுமலையான் கோயிலில் கடந்த மே 5-ம் தேதி இலவச தரிசன டோக்கன்விநியோகம் நிறுத்தப்பட்டது. எனினும், ரூ.300 செலுத்தினால் சிறப்பு தரிசன டோக்கன்கள் வழங்கப்படுகின்றன. தினமும் 8 ஆயிரம் டோக்கன்கள் ஆன்லைன் மூலம் வெளியிடப்படுகிறது.
வழக்கம்போல் விஐபி பிரேக்தரிசன டிக்கெட்டுகள், கல்யாண உற்சவ ஆன்லைன் டிக்கெட்டுகள், வாணி அறக்கட்டளை டிக்கெட்டுகள் (ஒரு பக்தருக்கு ஒரு டிக்கெட் ரூ.10,500) வழங்கப்பட்டு வந்தன.
இதனால், சாமானிய பக்தர்கள் சுவாமியை தரிசிக்க முடியாமல் வேதனையடைந்தனர். சாதாரண பக்தர்களும் ஏழுமலையானை தரிசிக்கும் விதத்தில் சர்வ தரிசன டோக்கன்களை நேரில் வழங்க வேண்டும் அல்லது ஆன்லைனில் வழங்கிட வேண்டும் என்று பக்தர்கள் கோரிக்கை விடுத்து வந்தனர்.
இதைத் தொடர்ந்து சோதனை அடிப்படையில் இன்றுமுதல் திருப்பதியில் அலிபிரி அருகே உள்ள பூதேவி காம்ப்ளக்ஸில் தினமும் காலை 6 மணி முதல் நாள்தோறும் 2 ஆயிரம் சர்வ தரிசன டோக்கன்களை சித்தூர் மாவட்ட பக்தர்களுக்கு மட்டும் வழங்க தேவஸ்தான அதிகாரிகள் தீர்மானித்துள்ளனர்.