போராட்டம் நடத்திய விவசாயிகள் மீது தடியடி நடத்திய போலீஸார் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி ஹரியாணா மினி தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாகச் சென்ற விவசாயச் சங்கத் தலைவர்கள் நேற்று கைது செய்யப்பட்டனர்.
மத்திய அரசு கொண்டு வந்துள்ள 3 புதிய விவசாயச் சட்டங்களை வாபஸ் பெறக் கோரி ஹரியாணா மாநிலம் கர்னால் பகுதியில் ஆர்ப்பாட்டம் நடத்திய விவசாயிகள் மீது போலீஸார் கடந்த மாதம் 28-ம் தேதி தடியடி நடத்தினர். இந்நிலையில் இதைக் கண்டித்து ஹரியாணா மினி தலைமைச் செயலகம் நோக்கி விவசாயச் சங்கத் தலைவர்கள் பேரணி நடத்த திட்டமிட்டனர்.
அதன்படி நேற்று பாரதீய கிசான் யூனியன் (பிகேயு) தலைவர் ராகேஷ் டிகைத், ஸ்வராஜ் இந்தியா தலைவர் யோகேந்திர யாதவ் உள்ளிட்ட தலைவர்கள், விவசாயிகள் ஊர்வலமாக சென்றனர். ஆனால் இந்த ஊர்வலம், பேரணிக்கு போலீஸார் அனுமதி தரவில்லை. தடையை மீறிச் செல்ல முயன்றதால் விவசாய சங்கத் தலைவர்கள், விவசாயிகளை போலீஸார் கைது செய்தனர்.
போராட்டத்தின் தீவிரத்தைக் குறைப்பதற்காக கர்னால் மாவட்டம் முழுவதும் இன்டர்நெட் சேவையை போலீஸார் ரத்து செய்திருந்தனர். மேலும் எஸ்எம்எஸ் சேவையும் நிறுத்தப் பட்டது.
இதனிடையே தடியடியில் இறந்த விவசாயி சுஷில் கஜ்லாவின் மரணத்துக்கு அரசு பதில் சொல்லவேண்டும் என்றும், இதுதொடர்பாக நீதி விசாரணை நடத்தவேண்டும் என்றும் ராகேஷ் டிகைத், தனது ட்விட்டர் பக்கத்தில் கோரிக்கை விடுத்துள்ளார்.
ஆனால் சுஷில் கஜ்லா, மாரடைப்பு காரணமாக இறந்தார்என்று போலீஸார் மறுத்து வருகின்றனர். - பிடிஐ