நாடு முழுவதிலும் இருந்து தினமும் பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் வந்து செல்லும் திருப்பதி ரயில் நிலையம் சர்வதேச தரத்தில் மேம்படுத்தப்படும் என ரயில்வே பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
திருப்பதி ரயில் நிலையத்துக்கு தினமும் சுமார் 60 ரயில்கள் வந்து செல்கின்றன. இதன் மூலம் ஆயிரக்கணக்கான பக்தர்கள் ஏழு மலையானை தரிசித்து வருகின்றனர். சமீபத்தில் ரேணிகுண்டாவில் சர்வதேச தரத்தில் விமான நிலையம் அமைக்கப்பட்டது, இதனை பிரதமர் மோடி திறந்து வைத்தார். இதனைத் தொடர்ந்து 2 மாதங்களுக்கு முன் திருப்பதிக்கு வந்திருந்த மத்திய ரயில்வே துறை அமைச்சர் சுரேஷ் பிரபு, விரைவில் திருப்பதி ரயில் நிலையம் சர்வதேச தரத்திற்கு உயர்த்தப்படும் என உறுதி அளித்திருந்தார்.
அதன்படி நேற்று ரயில்வே பட்ஜெட்டில் அறிவிப்பு வெளியானது. இதனை தொடர்ந்து விரைவில் திருப்பதி ரயில் நிலையம் அகலப்படுத்தப்பட உள்ளது. இதற்காக திருமலை-திருப்பதி தேவஸ்தானம் சார்பில் கோவிந்தராஜ சுவாமி சத்திரத்தில் இடம் ஒதுக்கீடு செய்யப்பட உள்ளது.
மேலும் இந்த ரயில்வே பட்ஜெட்டில், திருச்சானூர் ரயில் நிலைய மேம்பாட்டு பணிகளுக்காக ரூ. 10 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது. ஸ்ரீகாளஹஸ்தி-நடுகுடி இடையே புதிய ரயில்வே பாதை அமைக்கும் பணிக்காக ரூ. 180 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.